தேடுதல்

கர்தினால் பீட்டர் டர்க்சன் கர்தினால் பீட்டர் டர்க்சன் 

வறிய நாடுகளின் கடன்கள் இரத்துசெய்யப்பட...

ஈரான், லெபனான், சிரியா, லிபியா மற்றும், வெனெசுவேலா நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் அகற்றப்படுவதன் வழியாக, காரித்தாஸ் அமைப்பு, தன் பணிகளை ஏழைகளுக்குத் தொடர்ந்து ஆற்ற இயலும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய், நலவாழ்வு பிரச்சனையை மட்டுமின்றி, பல்வேறு துறைகளில் உருவாக்கியுள்ள சவால்களை எதிர்கொள்ள, கத்தோலிக்கத் திருஅவை உருவாக்கியுள்ள திட்டங்கள் குறித்து, மே 16, இச்சனிக்கிழமையன்று, திருப்பீட துறை ஒன்று, இணையதள நேரடி ஒளிபரப்பு வழியாக செய்தியாளர்களிடம் விளக்கியுள்ளது.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அந்த அவையின் இரு அலுவலகர்கள் மற்றும், உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் பொதுச்செயலர் அலாய்சியஸ் ஜான் ஆகியோர், கலந்துகொண்டனர்.

கோவிட்-19 கொள்ளைநோய் முடிவுற்றபின் உலகம் எதிர்கொள்ளவிருக்கும் பல்வேறு நெருக்கடிகளில், மக்களுக்கு உதவுவதற்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பரிந்துரையின்பேரில், மற்ற திருப்பீடத் துறைகளுடன் ஒத்துழைப்புடன், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை உருவாக்கியுள்ள பணிக்குழு ஆற்றிவரும் பணிகள் பற்றி, கர்தினால் டர்க்சன் அவர்கள் எடுத்துரைத்தார்.

இக்குழுவின் பணிகள் நீட்டிக்கப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டால் தவிர, இப்பணிகள் ஓராண்டுவரை நடைபெறும் என்றும், கர்தினால் டர்க்சன் அவர்கள் கூறினார்.

உலகின் உணவுத் தேவை

இந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்வில் உரையாற்றிய அருள்பணி Augusto Zampini-Davies அவர்கள், கடந்த நான்கு மாதங்களில் பசியினால் பலர் இறந்துள்ளனர் என்றும், உலகில் 80 கோடிப் பேர் கடும் பசிக்கொடுமையை அனுபவிக்கின்றனர் என்றும், 2050ம் ஆண்டில் உலகின் உணவுத் தேவை 50 விழுக்காடு அதிகரிக்கும் என்றும் கூறினார்.

ஆயினும், நிறைய உணவு வீணாக்கப்படுகின்றது என்றும், உணவுப் பிரச்சனை மிகவும் நலிந்த மக்களையே அதிகம் பாதிக்கின்றது என்றும் உரைத்த அருள்பணி Davies அவர்கள், இதற்கு உலக அளவில் ஆற்ற வேண்டியவை பற்றியும், Laudato Si’ திருமடல் நினைவுபடுத்துவதுபோல், உலக அளவில் இடம்பெறவேண்டிய மனமாற்றத்தின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்.

வறிய நாடுகளின் கடன்கள்

இந்த நேரடி ஒளிபரப்பு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய, உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் பொதுச்செயலர் அலாய்சியஸ் ஜான் அவர்கள், இந்தக் காலம்,  படைப்பாற்றல்கொண்ட ஒருமைப்பாட்டிற்காக, கண்ணீருடன் விண்ணப்பிக்கின்றது என்றும், காரித்தாஸ் அமைப்பு, கடும் வறுமையில் வாழ்வோருக்குத் தொடர்ந்து பணியாற்றி வருகின்றது என்றும் கூறினார்.

கோவிட்-19 நெருக்கடியைக் களைவதற்கென திருஅவையில் உருவாக்கப்பட்டுள்ள நிதி அமைப்பு வழியாக, ஈக்குவதோர், இந்தியா, பாலஸ்தீனம், பங்களாதேஷ், லெபனான், புர்கினா ஃபாசோ உள்ளிட்ட 14 நாடுகளில் 78 இலட்சத்திற்கு அதிகமான மக்களுக்கு காரித்தாஸ் உதவி வருகின்றது என்று அறிவித்த ஜான் அவர்கள், திருஅவையின் இந்தப் பணிக்காக, தமிழக காரித்தாஸ் ஒருங்கிணைப்பாளர் நன்றி தெரிவித்தார் என்று கூறினார்.

இந்த பெருந்துயர் நேரத்தில் மனித சமுதாயம் முழுவதும் தோழமையுணர்வை வெளிப்படுத்துவதில் ஒன்றிணைய வேண்டும் என்றும், ஈரான், லெபனான், சிரியா, லிபியா மற்றும், வெனெசுவேலா நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் அகற்றப்படுவதன் வழியாக, காரித்தாஸ் அமைப்பு ஏழைகளுக்கு ஆற்றும் பணிகளைத் தொடர இயலும் என்று, ஜான் அவர்கள் தெரிவித்தார்.

மிக வறிய நாடுகளின் கடன்கள் இரத்து செய்யப்படவேண்டும் அல்லது, 2020ம் ஆண்டில் செலுத்தவேண்டிய வட்டியாவது இரத்து செய்யப்படவேண்டும் என்று உலக சமுதாயத்திடம் கேட்டுக்கொண்ட ஜான் அவர்கள், தேவையில் உள்ள நாடுகளுக்கு பன்னாட்டு நன்கொடைகள் தொடர்ந்து வழங்கப்படவேண்டும், அவை மற்ற நோக்கங்களுக்காக வழங்கப்படக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

16 May 2020, 16:29