தேடுதல்

Vatican News
கர்தினால் மைக்கில் செர்னி கர்தினால் மைக்கில் செர்னி  

நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்து வாழ்வோர், அடையாளமின்றி...

நாடுவிட்டு, நாடு புலம்பெயர்ந்து செல்லும் மக்களுக்கு பன்னாட்டு அமைப்புக்கள் பல உதவிகள் வழங்க முன்வரும் வேளையில், நாட்டுக்குள்ளேயே புலம் பெயரும் மக்களை, கத்தோலிக்கத் திருஅவை, தன் இலக்காகக் கொண்டு உதவிகள் செய்வது முக்கியம் - கர்தினால் செர்னி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்து வாழும் கட்டாயத்திற்கு உள்ளாகும் மக்கள், நாட்டின் எல்லையைக் கடக்காமல் இருப்பதால், அவர்களின் நிலையை மக்கள் அறிவதற்கும், புரிந்துகொள்வதற்கும் இயலாமல் போகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு மேய்ப்புப்பணி வழிமுறைகள் என்ற ஏடு அண்மையில் வெளியானதையொட்டி, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின், புலம்பெயர்ந்தோர் பிரிவின் செயலர், கர்தினால் மைக்கில் செர்னி அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில், அடையாளமின்றி வாழும் இம்மக்களின் துன்பங்களைக் குறித்துப் பேசினார்.
நாடுவிட்டு, நாடு புலம்பெயர்ந்து செல்லும் மக்களுக்கு பன்னாட்டு அமைப்புக்கள் பல உதவிகள் வழங்க முன்வரும் வேளையில், நாட்டுக்குள்ளேயே புலம் பெயரும் இம்மக்களை, கத்தோலிக்கத் திருஅவை தன் இலக்காகக் கொண்டு உதவிகள் செய்வது முக்கியம் என்று கர்தினால் செர்னி அவர்கள் குறிப்பிட்டார்.
நம் கவனத்தை ஈர்க்காமல் இதுவரை வாழ்ந்து வந்த இம்மக்களை கண்திறந்து பார்க்கவும், அவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளவும், அண்மையில் வெளியான இந்த மேய்ப்புப்பணி ஏடு உதவியாக இருக்கும் என்று கர்தினால் செர்னி அவர்கள் இப்பேட்டியில் குறிப்பிட்டுப் பேசினார்.
ஒரு சராசரி கிறிஸ்தவர் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க எவ்விதம் உதவி செய்யலாம் என்பது குறித்த கேள்வி எழுந்தபோது, புலம்பெயர்ந்தோருடன் செயலாற்றும் பங்கு அமைப்புக்கள், அல்லது துறவற அமைப்புக்களுடன் தொடர்புகொண்டு, நாட்டுக்குள்ளேயே புலம் பெயர்ந்து வாழ்வோர் தாங்கள் வாழும் பகுதியில் உள்ளனரா என்பதையும், அவர்களுக்கு செய்யப்பட்டு வரும் உதவிகள் குறித்தும் அறிந்துகொள்வது, சராசரி கிறிஸ்தவர்கள் செய்யக்கூடிய முதல் பணி என்ற கர்தினால் செர்னி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
 

07 May 2020, 13:59