தேடுதல்

Vatican News
பானமாவில் உலக இளைஞர்கள் நாள், 2019, சன.22-27 பானமாவில் உலக இளைஞர்கள் நாள், 2019, சன.22-27  (Vatican Media)

திருஅவையின் இரு முக்கிய நிகழ்வுகள் தள்ளி வைப்பு

2021ம் ஆண்டு உரோம் நகரில் நடைபெறவிருந்த, குடும்பங்களின் உலக மாநாடும், 2022ம் ஆண்டு லிஸ்பன் நகரில் நடைபெறவிருந்த, இளைஞர்கள் உலக நாளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமி பரவல் காரணமாக, வருகிற ஆண்டுகளில் நடைபெறவிருந்த திருஅவையின் இரு முக்கிய உலகளாவிய நிகழ்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன என்று, ஏப்ரல் 20, இத்திங்கள் மாலையில் திருப்பீடம் அறிவித்தது.

2021ம் ஆண்டு ஜூன் மாதம் உரோம் நகரில் நடைபெறவிருந்த, குடும்பங்களின் உலக மாநாடு, 2022ம் ஆண்டு ஜூன் மாதமும், 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், லிஸ்பன் நகரில் நடைபெறவிருந்த இளைஞர்கள் உலக நாள், 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் நடைபெறும் என்று, திருப்பீட தகவல் தொடர்பக இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள் அறிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவையுடன் கலந்தாலோசித்தபின், குடும்பங்களின் உலக மாநாடும், இளைஞர்கள் உலக நாளும் நடைபெறும் நாள்களைத் தள்ளி வைப்பதற்குத் தீர்மானித்தார் என்றும், புரூனி அவர்கள் தெரிவித்தார்.

தற்போதைய கொரோனா தொற்றுக்கிருமியின் பரவல்நிலை, மற்றும், அதன் பின்விளைவுகள் காரணமாக, குடும்பங்களும், இளைஞர்களும், ஒன்றுகூடுவதில் ஏற்படும் சிரமங்களைக் கண்முன் நிறுத்தி, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என்றும், புரூனி  அவர்கள் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

இளைஞர்கள் உலக நாள்

இளைஞர்கள் உலக நாளை, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1985ம் ஆண்டில் உருவாக்கினார். அதன்பின்னர், இந்த நாள் ஒவ்வோர் ஆண்டும் மறைமாவட்ட அளவில் குருத்து ஞாயிறன்றும், ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, பன்னாட்டு அளவிலும் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வுகளில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொள்கின்றனர்.

34வது இளைஞர்கள் உலக நாள், 2019ம் ஆண்டு சனவரி மாதத்தில், மத்திய அமெரிக்க நாடான பானமாவில் நடைபெற்றது. அதில், ஏறத்தாழ ஏழு இலட்சம் கத்தோலிக்க இளைஞர்கள் பங்குபெற்றனர்.  

2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் போர்த்துக்கல் நாட்டு லிஸ்பன் நகரில் நடைபெறும் இளைஞர்கள் உலக நாள், “மரியா எழுந்து விரைந்து சென்றார்” என்ற தலைப்பில், சிறப்பிக்கப்படும்.

குடும்பங்கள் உலக மாநாடு

மேலும், குடும்பங்கள் உலக மாநாட்டை, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1994ம் ஆண்டில் உருவாக்கினார். இம்மாநாடு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, வெவ்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.

“குடும்ப அன்பு: புனிதத்துவத்திற்கு ஓர் அழைப்பும், ஒரு வழியும்” என்ற தலைப்பில், குடும்பங்களின் உலக மாநாடு, 2022ம் ஆண்டு உரோம் நகரில் நடைபெறவுள்ளது. இதற்கு முந்தைய இம்மாநாடு, 2018ம் ஆண்டில், அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் நடைபெற்றது.

21 April 2020, 15:05