தேடுதல்

Vatican News
உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் உதவி உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் உதவி 

கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு காரித்தாஸ் ஆதரவு

கோவிட்-19ன் பின்விளைவுகளை எதிர்கொள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள, திட்டக்குழுவின் ஐந்து பிரிவுகளில் முதல் குழுவில் உலகளாவிய காரித்தாஸ் அமைப்பு இணைந்துள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக் கிருமியின் பாதிப்புக்களால் துன்புறும் தலத்திருஅவைகளின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கும் விதமாக, உலகளாவிய காரித்தாஸ் அமைப்பு, “கோவிட்-19 பதிலுறுப்பு நிதி” என்ற ஒரு புதிய அமைப்பை உருவாக்கியுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளின்படி, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை உருவாக்கியுள்ள திட்டக்குழுவின் ஐந்து பிரிவுகளில் முதல் குழுவில் இணைந்துள்ள உலகளாவிய காரித்தாஸ் அமைப்பு, தலத்திருஅவைகளின் தேவைகளுக்குச் செவிமடுத்து, அவற்றுக்கு ஆதரவு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 

ஒருமைப்பாட்டின் அடையாளம்

கோவிட்-19 கொள்ளை நோயின் நெருக்கடியில் துன்புறும் மக்களுக்கு திருஅவை எவ்வாறு உதவுகின்றது என்பதை, வத்திக்கான் செய்தித்துறையிடம் விளக்கிய உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் பொதுச் செயலர் அலாய்சியஸ் ஜான் அவர்கள், உதவி தேவைப்படும் தலத்திருஅவைகள் பற்றிய விவரங்களை 140 ஆயர்கள் பேரவைகளிடமிருந்து ஏற்கனவே சேகரித்து உள்ளதாக அறிவித்தார்.

காரித்தாஸ் அமைப்பு உருவாக்கியுள்ள, ஒருமைப்பாட்டு நிதி, கோவிட்-19 கிருமி பரவாமல் தடுப்பது, அதைக் கட்டுப்படுத்துவது, சுத்தமான குடி நீர் கிடைக்கச் செய்வது, தற்காப்பு கவசங்களை விநியோகிப்பது போன்ற நலவாழ்வுப் பணிகளுக்கென பயன்படுத்தப்படும் என்று, ஜான் அவர்கள் எடுத்துரைத்தார்.

சமூக ஊரடங்கு முறை கடைப்பிடிக்கப்படும் இடங்களில் உணவு பாதுகாப்பு குறித்து காரித்தாஸ் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்று கூறிய ஜான் அவர்கள், வளரும் நாடுகளிலுள்ள சில வறியோர், சமூக ஊரடங்கை கடைப்பிடிப்பதைவிட, வேலை தேடிச் செல்வதையே விரும்புகின்றனர் என்று தெரிவித்தார். 

பாலஸ்தீனாவிலுள்ள எருசலேம் நகர் காரித்தாஸ் அமைப்பிற்கு ஏற்கனவே பணப் பற்றாக்குறை இடம்பெறுவதால், தேவையில் இருக்கும் 500 குடும்பங்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் நலவாழ்வு சார்ந்த உதவிகளை, கட்டாயமாக நிறுத்தவேண்டிய நிலைக்கு உட்பட்டுள்ளது என்றும், ஜான் அவர்கள் தெரிவித்தார்.

கோவிட்-19 தொடர்புடைய நெருக்கடி நிலையைக் களைவதற்கென வத்திக்கான் வங்கியில்  (Institute for the Works of Religion) ஒரு புதிய நிதி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதற்குப் பணம் அனுப்புவோர் IBAN: VA29001000000020179007 என்பதைப் பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாப்பிறை மறைப்பணி கழகங்கள்  

மேலும், கோவிட் 19 நெருக்கடி நிலையை எதிர்கொள்வதற்கு, அவசரகால நிதி  திட்டம் ஒன்றை உருவாக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில், இஸ்பெயின் நாட்டின் பாப்பிறை மறைப்பணி கழகங்களும் (PMS), இக்கொள்ளை நோயால் தாக்கப்பட்டுள்ள மறைப்பணித்தளங்களுக்கு உதவுவதற்கு, அவசரகால நிதி திட்டத்தை உருவாக்கியுள்ளது. (Zenit)

17 April 2020, 12:41