தேடுதல்

ஆஸ்ட்ரியாவில் காரித்தாஸ் தன்னார்வலர்கள் ஆஸ்ட்ரியாவில் காரித்தாஸ் தன்னார்வலர்கள் 

கோவிட்-19 : உதவிகளில் எவரும் ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது

உலக அரசுகள், உலகின் தெற்குப் பகுதியையும், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோரையும் மறந்து விடாதிருக்கவும், போர் மற்றும் வறுமையை எதிர்கொள்ளும் நாடுகளுக்குத் தொடர்ந்து உதவவும் காரித்தாஸ் வலியுறுத்தல்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 தொற்றுக்கிருமி உருவாக்கியுள்ள நெருக்கடிநிலையில், உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம் ஆற்றிவரும் பணிகள் குறித்து, அந்நிறுவனத்தின் பொதுச் செயலர் அலாய்சியஸ் ஜான் அவர்கள், ஏப்ரல் 3, இவ்வெள்ளியன்று, வலைத்தளம் வழியே நடத்திய நிகழ்நிலை செய்தியாளர் கூட்டத்தில் விளக்கினார்.

கொரோனா தொற்றுக்கிருமி தாக்குதல், உலக அளவில் பல நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளவேளை, இந்நெருக்கடி சூழலில் துன்புறும் மக்களுக்கு, குறிப்பாக, மிகவும் நலிந்த மக்களுக்கு காரித்தாஸ் அமைப்புகள் உதவி வருகின்றன என்று ஜான் அவர்கள் கூறினார்.  

இந்நெருக்கடி நேரத்தில், ஹாங்காங் முதல், மத்திய ஆப்ரிக்கா, வெனெசுவேலா வரை, மக்கள் முன்னெச்சரிக்கையுடன் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் மற்றும், வறியோருக்கு உதவி வருவதாகவும், ஜான் அவர்கள் எடுத்துரைத்தார். 

உலகின் தெற்குப் பகுதியையும், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோரையும் மறந்து விடாதிருக்கவும், போர் மற்றும் வறுமையை எதிர்கொள்ளும் நாடுகளுக்குத் தொடர்ந்து உதவவும் வேண்டுமென்று, உலக அரசுகளுக்கு, உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம் விண்ணப்பிக்கின்றது என்றும், அதன் பொதுச் செயலர் ஜான் அவர்கள் தெரிவித்தார். 

உலகில் பத்து இலட்சத்திற்கு அதிகமானோர் கோவிட்-19 தொற்றுக் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2020, 12:45