தேடுதல்

Vatican News
உரோம் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவரும் கர்தினால் ஆஞ்ஜெலோ தே தொனாத்திஸ் உரோம் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவரும் கர்தினால் ஆஞ்ஜெலோ தே தொனாத்திஸ்  (AFP or licensors)

நோயினால் துன்புறுவோருடன் இணைந்த கர்தினால்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பாக, உரோம் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவரும் கர்தினால் ஆஞ்செலோ தே தொனாத்திஸ் அவர்கள், கோவிட்-19 தொற்றுக்கிருமியால் நோயுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பாக, உரோம் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவரும் கர்தினால் ஆஞ்ஜெலோ தே தொனாத்திஸ் (Angelo De Donatis) அவர்கள், கோவிட்-19 தொற்றுக்கிருமியால் நோயுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 30, இத்திங்களன்று, காய்ச்சல் காரணமாக உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்தினால் தே தொனாத்திஸ் அவர்களுக்கு கோவிட்-19ன் தாக்கம் உள்ளதென்று கண்டுபிடிக்கப்பட்டு, அதற்குரிய சிகிச்சைகளைப் பெற்று வருகிறார் என்றும், தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

கொடுமையான இந்நோயினால் துன்புற்று போராடிவரும் அனைவரோடும், இணைந்துள்ள நான், அமைதியாகவும், நம்பிக்கையோடும் இருக்கிறேன், உரோம் மக்களின் செபங்களுக்கு நன்றி என்று, கர்தினால் தே தொனாத்திஸ் அவர்கள் கூறியுள்ளார்.

மக்கள் அடைந்துள்ள துன்பங்களில் இணைந்துள்ள நான், என் துன்பங்களை, உரோம் மக்களுக்காகவும், இவ்வுலக மக்களுக்காகவும் ஒப்படைக்கிறேன் என்று கர்தினால் தே தொனாத்திஸ் அவர்கள் மேலும் கூறியுள்ளார்.

மார்ச் 11ம் தேதி முதல், கர்தினால் தே தொனாத்திஸ் அவர்கள், ஒவ்வொருநாளும் மாலையில், உரோம் நகருக்கருகே அமைந்துள்ள புகழ்பெற்ற திவினோ அமோரே (Divino Amore) என்ற திருத்தலத்தில் நிறைவேற்றிவந்த திருப்பலிகள், ஊடகங்கள் வழியே மக்களை அடைந்து வந்தது.  

இதற்கிடையே, எத்தியோப்பியாவின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக பணியாற்றிய சலேசிய சபை துறவியான ஆயர் ஆஞ்ஜெலோ மொரெஸ்கி (Angelo Moreschi) அவர்கள், கோவிட் 19ன் தாக்கத்தால் உயிரிழந்த முதல் ஆயர் என்று, வத்திக்கான் செய்தி கூறுகிறது.

மேலும், கோவிட்19ன் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி நாட்டில், 60க்கும் மேற்பட்ட அருள்பணியாளர்களும், துறவியரும், இந்நோயின் காரணமாக, இறையடி சேர்ந்துள்ளனர்.

01 April 2020, 14:20