தேடுதல்

Vatican News
பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கெவின் பாரேல் பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கெவின் பாரேல் 

நாம் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் குடும்பம்

கோவிட் 19 தொற்றுக்கிருமியின் உலகளாவிய தாக்கம், நாம் வாழும் இந்த பூமி மிகவும் சிறியது என்ற உண்மையையும், நாம் அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்கிறோம் என்ற உண்மையையும் அனைவருக்கும் உணர்த்தியிருக்கவேண்டும் - கர்தினால் பாரேல்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கத் திருஅவையில் கொண்டாடப்படவிருந்த குடும்பங்களின் உலக மாநாடு, மற்றும் இளையோர் உலக நாள் நிகழ்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதைக் குறித்தும், இந்தக் கடினமான காலத்தில் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களைக் குறித்தும், பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கெவின் பாரேல் (Kevin Farrell) அவர்கள், வத்திக்கான் செய்திக்கு வழங்கிய பேட்டியில் தன் கருத்துக்களை வெளியிட்டார்.

2021ம் ஆண்டு ஜூன் மாதம் உரோம் நகரில் நடைபெறவிருந்த, குடும்பங்களின் உலக மாநாடு, 2022ம் ஆண்டு ஜூன் மாதமும், 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், லிஸ்பன் நகரில் நடைபெறவிருந்த இளைஞர்கள் உலக நாள், 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் நடைபெறும் என்று, திருப்பீட தகவல் தொடர்பக இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள் அறிவித்திருந்தார்.

கோவிட் 19 தொற்றுநோயின் உலகளாவியப் பரவலின் இறுதியில், இவ்வுலகில் எவ்வகையானச் சூழல் நிலவும் என்பதை இப்போதே கணிக்க இயலாது என்று குறிப்பிட்ட கர்தினால் பாரேல் அவர்கள், இத்தகைய உலகளாவிய நிகழ்வுகளுக்கு, குறைந்தது ஓராண்டளவாகிலும் தயாரிப்புகள் தேவைப்படும் என்பதால், இம்முடிவுகள் எடுக்கப்பட்டன என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வுகளில், பல்லாயிரம் பேர் கலந்துகொள்வர் என்பதால், மக்கள் கூடிவருவதில் எவ்வித பிரச்சனையும் எழாது என்பதை உறுதி செய்தபின்னரே, இந்நிகழ்வுகள் நடைபெறுவது சாத்தியமாகும் என்று சுட்டிக்காட்டினார், கர்தினால் பாரேல்.

கோவிட் 19 தொற்றுக்கிருமியின் உலகளாவிய பரவல் நிலை, நாம் வாழும் இந்த பூமி மிகவும் சிறியது என்ற உண்மையையும், நாம் அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்கிறோம் என்ற உண்மையையும் அனைவருக்கும் உணர்த்தியிருக்கவேண்டும் என்று கர்தினால் பாரேல் அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

இல்லத்தில், குடும்பத்தோடு தங்கியிருக்கவேண்டிய சூழல், நம்மை மீண்டும், சமுதாயத்தின் அடித்தளமான குடும்பம் என்ற உண்மையை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு உதவியிருக்கும் என்று தான் நம்புவதாக, பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பாரேல் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

22 April 2020, 15:43