தேடுதல்

Vatican News
திருத்தந்தை 12ம் பயஸ் குறித்த ஆவணங்களின் ஒரு பகுதி திருத்தந்தை 12ம் பயஸ் குறித்த ஆவணங்களின் ஒரு பகுதி   (AFP or licensors)

திருத்தந்தை 12ம் பயஸ் குறித்த ஆவணங்கள் ஆய்வாளர்களின் பார்வைக்கு

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், மௌனம் காக்கவில்லை, மாறாக, தன் வார்த்தைகள் மற்றும் செயல்பாடுகள் வழியாக எதிர்ப்பை வெளிப்படுத்தினார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்:  வத்திக்கான் செய்திகள்

இரண்டாம் உலகப்போர் காலத்தில் திருஅவையை வழிநடத்திச் சென்ற திருத்தந்தை 12ம் பயஸ் குறித்த அனைத்து ஆவணங்களும் தற்போது ஆய்வாளர்களின் பார்வைக்கென திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் உலகப்போரின்போதும், நாத்சி சித்ரவதைகளின்போதும் திருஅவையின் செயல்பாடுகள், மற்றும், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களின் மௌனம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டுவந்த நிலையில், இத்திங்கள் முதல், திருத்தந்தை 12ம் பயஸ் குறித்த அனைத்து இரகசிய ஆவணங்களும், ஆய்வாளர்களுக்கென திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவண காப்பக தலைவர் ஆயர் Sergio Pagano அவர்கள், திருத்தந்தை 12ம் பயஸ் குறித்து ஆய்வு செய்ய விரும்பி விண்ணப்பித்த 85 ஆய்வாளர்களுக்கும், அத்திருத்தந்தை பதவி வகித்த 1939ம் ஆண்டு முதல், 1958ம் ஆண்டு வரையுள்ள அனைத்து ஆவணங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன எனவும், விரும்பி விண்ணப்பிப்பவர்களுக்கு ஆய்வு செய்வதற்குரிய நேரம் ஒதுக்கப்படும் எனவும் கூறினார்.

இரண்டாம் உலகப்போரின்போது திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், மௌனம் காக்கவில்லை, மாறாக, தன் வார்த்தைகள் மற்றும், செயல்பாடுகள் வழியாக  எதிர்ப்பை வெளிப்படுத்தினார் என்பதை ஆயவாளர்கள், இந்த ஆவணங்கள் வழி கண்டுணர்வர் என்றார் ஆயர் Pagano.

ஏறத்தாழ 20 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்திச் சென்ற திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களைக் குறித்த அனைத்து ஆவணங்களையும் வரிசைப்படுத்தி, தலைப்பு வாரியாக பிரித்து ஒழுங்கமைக்க 12 ஆண்டுகள் எடுத்தது எனவும், கூறினார் ஆயர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்று வரையுள்ள ஆவணங்களைக் காத்துவரும் வத்திக்கான் ஆவண காப்பகத்தின் அலமாரிகளை வரிசையாக அடுக்கினால், அது 50 மைல் தூரத்தை எட்டும் என்று கூறப்படுகிறது.

03 March 2020, 14:49