தேடுதல்

Vatican News
திருப்பீடத் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் பங்கு பெறும் தியானம் திருப்பீடத் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் பங்கு பெறும் தியானம்  (Vatican Media)

தியான உரை - பாலை நில அனுபவங்கள்

நம் வாழ்விலும் பாலை நிலத்தையொத்த அனுபவங்கள் உள்ளன. வறட்சியாகத் தெரியும் அந்த அனுபவத்தில் இறைவன் நம்மைச் சந்திக்கவும், நமக்கு தனது வழிமுறைகளை உணர்த்தவும் விழைகிறார் – தியான உரை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும், திருப்பீடத் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளை, ஆண்டு ஆன்மீக பயிற்சிகளில் வழிநடத்திவரும் இயேசு சபை அருள்பணி பியெத்ரோ பொவாத்தி (Pietro Bovati) அவர்கள், மனித வரலாற்றை உடைத்துக்கொண்டு, உள்ளே வரும் இறைவார்த்தை, மக்களின் அச்சங்களுக்கு மாற்று மருந்தாக அமையும் என்று, இப்புதனன்று வழங்கிய தியான உரையில் கூறினார்.

இரவில் நடைபெற்ற கடல் பயணங்கள்

இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடந்த நிகழ்வையும் (விடுதலைப் பயணம் 14), இயேசு கடல் மீது நடந்த நிகழ்வையும் (மத்தேயு 14) இணைத்து, தன் எண்ணங்களைத் தொகுத்து வழங்கிய அருள்பணி பொவாத்தி அவர்கள், இவ்விரு கடத்தல்களும் இரவில் நடைபெற்றன என்பதை சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

இரவில், கடலில் பயணங்களை மேற்கொள்ளும் மக்கள், அன்று மட்டுமல்ல, இன்றும் உள்ளனர் என்பதை தன் தியான உரையில் சுட்டிக்காட்டிய அருள்பணி பொவாத்தி அவர்கள், அம்மக்களுக்கு உற்சாகம் ஊட்டுவது, நம் முக்கியமான பணி என்பதையும் எடுத்துரைத்தார்.

திருப்பாடல் 124ன் சொற்கள், செபமாக...

"ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்; கொந்தளிக்கும் வெள்ளம், நம்மீது பாய்ந்தோடியிருக்கும்" என்று கூறும் திருப்பாடல் 124ன் சொற்களை தங்கள் செபமாகப் பயன்படுத்துமாறு கூறி, அருள்பணி பொவாத்தி அவர்கள், தன் காலை தியான உரையை நிறைவு செய்தார்.

பாலை நிலத்தில் செலவிட்ட 40 ஆண்டுகள்

இப்புதனன்று, பிற்பகலில் வழங்கிய தியான உரையில், அருள்பணி பொவாத்தி அவர்கள், இஸ்ரயேல் மக்கள் பாலை நிலத்தில் செலவிட்ட 40 ஆண்டுகளை மையப்படுத்தி, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் பாலை நிலம் பெரும் பங்கு வகித்ததுபோலவே, நம் வாழ்விலும் பாலை நிலத்தையொத்த அனுபவங்கள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிய அருள்பணி பொவாத்தி அவர்கள், வறட்சியாகத் தெரியும் அந்த அனுபவத்தில் இறைவன் நம்மைச் சந்திக்கவும், நமக்கு தனது வழிமுறைகளை உணர்த்தவும் விழைகிறார் என்பதை, தன் தியான உரையில் வலியுறுத்திக் கூறினார்.

05 March 2020, 15:01