தேடுதல்

Vatican News
இந்த ஆண்டு ஆன்மீக பயிற்சிகளை வழிநடத்திவந்த இயேசு சபை அருள்பணி பியெத்ரோ பொவாத்தி இந்த ஆண்டு ஆன்மீக பயிற்சிகளை வழிநடத்திவந்த இயேசு சபை அருள்பணி பியெத்ரோ பொவாத்தி   (Vatican Media)

திருத்தந்தை, திருப்பீட அதிகாரிகளின் ஆண்டு தியானம் நிறைவு

தம் கட்டளைக்குப் பணிந்துநடக்கும் சீடர்களிலும், தங்களின் சிறிய அறைகளுக்குள் கைதிகளாக இருக்காமல், இறையருளின் சுடரை உலகில் கொண்டு செல்கின்ற சீடர்களிலும், கிறிஸ்து பிரசன்னமாய் இருக்கிறார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருப்பீடத் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், உரோம் நகருக்கருகில் அரிச்சா எனுமிடத்தில், விண்ணகப் போதகர் இல்லத்தில் மேற்கொண்ட ஆண்டு தியானத்தை, மார்ச் 06 இவ்வெள்ளியன்று நிறைவு செய்தனர்.

பொதுவாக பலரையும் பாதிக்கும் சளியின் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில், தனது அறையில் இருந்தவண்ணம் தியான உரைகளைக் கேட்டார்.

இந்த ஆண்டு ஆன்மீக பயிற்சிகளை வழிநடத்திவந்த இயேசு சபை அருள்பணி பியெத்ரோ பொவாத்தி (Pietro Bovati) அவர்கள், இத்தியானத்தின் நிறைவாக, இவ்வெள்ளி காலையில், "கடவுளின் பிரசன்னம்" என்ற தலைப்பில் சிந்தனைகளை வழங்கினார்.

தம் கட்டளைக்குப் பணிந்துநடக்கும் சீடர்களிலும், தங்களின் சிறிய அறைகளுக்குள் கைதிகளாக இருக்காமல், இறையருளின் சுடரை உலகில் கொண்டு செல்கின்ற சீடர்களிலும், உலகம் முடியும்வரை, நான் எந்நாளும் உங்களோடு இருக்கிறேன் என்று சொல்லிப் பணித்த தூதுப்பணியை நிறைவேற்றுகின்ற சீடர்களிலும் கிறிஸ்து பிரசன்னமாய் இருக்கிறார் என்றும் அருள்பணி பொவாத்தி அவர்கள் கூறினார்.

மார்ச் 01, இஞ்ஞாயிறு பிற்பகலில் தொடங்கி, மார்ச் 06, இவ்வெள்ளி காலையில் நிறைவுற்ற இத்தியானத்திற்கு, விடுதலைப்பயண நூல் பிரிவு 33, மத்தேயு நற்செய்தி பிரிவு 28 (28, 16-20), திருப்பாடல் 90 ஆகியவற்றிலிருந்து சிந்தனைகளை வழங்கினார்  அருள்பணி பொவாத்தி.

நம் வாழ்வில் ஆண்டவர் பிரசன்னமாய் இருக்கிறார், அவர் நமக்கு இம்மானுவேல் இருக்கிறார், நம் பயணத்தில் நம்மோடு வருகிறார் ஆகியவற்றை வலியுறுத்தி தியான உரைகள் ஆற்றினார் அருள்பணி பொவாத்தி.

மேலும், சாதாரண சளியின் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதிலிருந்து குணமடைந்து வருகிறார் என்று, திருப்பீட தகவல் தொடர்பக இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள், இவ்வெள்ளி காலையில் அறிவித்தார்.

06 March 2020, 14:55