தேடுதல்

Vatican News
புனித பேதுரு பெருங்கோவில் மேல்பகுதி புனித பேதுரு பெருங்கோவில் மேல்பகுதி   (ANSA)

கோவிட்-19 மனித உடன்பிறந்தநிலைக்குச் சவால்

கோவிட்-19 உருவாக்கியுள்ள நெருக்கடியான சூழல்களில், வயது முதிர்ந்தோர் மற்றும், நலிந்தவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று, திருப்பீட வாழ்வுக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமைப்புமுறையான கலாச்சாரத்தில், மனித உடன்பிறந்தநிலை உணர்வை வெளிப்படுத்துவதற்கு, கோவிட்-19, நல்வாய்ப்பாக அமைந்துள்ளது என்று, திருப்பீட வாழ்வு கழகம் அறிவித்துள்ளது.

கோவிட்-19 அவசரகால நிலை பற்றி, “கொள்ளை நோயும், உலகளாவிய மனித உடன்பிறந்த நிலையும்” என்ற தலைப்பில், அறிக்கை வெளியிட்டுள்ள, திருப்பீட வாழ்வுக் கழகம், அறிவியலுக்கும், மனிதாபிமானத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு, இந்த நெருக்கடிக்குப் பதில் அளிப்பதற்கு, நமக்கு வழிகாட்ட வேண்டும் என்று கூறியுள்ளது

வாழ்வின் அடிப்படை

தற்போதைய சூழல், நம் சொந்த வாழ்வுக்கு நாம் முதலாளிகள் அல்ல, மாறாக, நம் வாழ்வு ஒன்றோடொன்று தொடர்புடையது என்ற விழிப்புணர்வையும், நமது தனிப்பட்ட உரிமைகள் மற்றும், சுதந்திரங்கள் பற்றிய அக்கறையையும் உருவாக்கியுள்ளது என்றும், அக்கழகம் கூறியுள்ளது.

உரிமைகள், கடமைகளோடு தொடர்புடையவை என்றும், மனிதரின் சுதந்திரமான மற்றும், சமத்துவ வாழ்வு, தொழில்நுட்பக் கருவிகளோடு அல்ல, மாறாக, அறநெறி சார்ந்த விடயம் என்றும் குறிப்பிட்டுள்ள அக்கழகம், இந்த நெருக்கடியான சூழல்களில், வயது முதிர்ந்தோர் மற்றும், நலிந்தவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டியது முக்கியம் எனக் கூறியுள்ளது.

நலிந்தவர் மீது அக்கறை

மிகவும் பலவீனமானவர்கள், குறிப்பாக, வயது முதிர்ந்தோர் மற்றும், சிறப்புக் கவனம் தேவைப்படும் மக்கள் மீது அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், இவர்கள் மீது காட்டப்படும் எல்லாவிதமான நன்மைத்தனமும், அக்கறையும், உயிர்த்த இயேசுவின் வெற்றியாக அமைந்துள்ளன என்றும், அக்கழகத்தின் அறிக்கை கூறுகின்றது.

அதேநேரம், மற்ற பேரிடர்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர், போர்களுக்குப் பலியாகியுள்ளோர் மற்றும், பசிக்கொடுமையை அனுபவிப்பவர்களையும் நாம் மறக்கக் கூடாது என்றும், அக்கழகம் வலியுறுத்தியுள்ளது.

செபத்தின் வல்லமை

இறுதியாக, தொற்றுக்கிருமி அச்சுறுத்தும் இந்தக் காலத்தில், இறைவனை நோக்கி மன்றாடுவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியுள்ள, திருப்பீட வாழ்வு கழகம், இக்காலத்தில் நம் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கின்ற மரணம் மற்றும், அச்சத்தை எதிர்கொள்வதற்கு, செபம் உதவுகின்றது என்றும், இறைப்பற்றில்லாதவர்கள் மத்தியிலும் நிலவும் உலகளாவிய மனித உடன்பிறந்தநிலைக்கு, நாம் அனைவரும் சான்றுபகர அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளது.  

31 March 2020, 14:31