தேடுதல்

Brescia மருத்துவமனை Brescia மருத்துவமனை 

கொரோனா தொற்றுக்கிருமி : பரிபூரண பலன்கள்

கோவிட்-19 கொள்ளை நோய் முடிவுறவும், நோயாளிகள் குணம் பெறவும், இதில் இறந்தவர்கள் இறைசாந்தியைப் பெறவும் செபிக்கின்ற கத்தோலிக்கர் அனைவருக்கும் பரிபூரண பலன்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 தொற்றுக்கிருமி அவசரகால நிலையை முன்னிட்டு, அத்தொற்றுக்கிருமி நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள், குடும்பத்தினர், மற்றும், அவர்களுக்காகச் செபிக்கும் அனைத்து கத்தோலிக்கருக்கும் அப்போஸ்தலிக்க பாவமன்னிப்பு சலுகை அலுவலகம், பரிபூரண பலன்களை அறிவித்துள்ளது.

மார்ச் 20, இவ்வெள்ளியன்று அப்போஸ்தலிக்க பாவமன்னிப்பு சலுகை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ள நோயாளிகள், வீடுகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளவர்கள், மருத்துவப் பணியாளர்கள் போன்றோர், செபமாலை, சிலுவைப்பாதை போன்ற பக்தி முயற்சிகளில் ஆன்மீக முறையில் பங்கெடுப்பதன் வழியாக, பரிபூரண பலன்களைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.    

திருத்தந்தையின் அனுமதியுடன், அந்த அலுவலகத்தின் தலைவர் கர்தினால் Mauro Piacenza, அதன் செயலர் பேரருள்திரு Krzysztof Józef Nykiel ஆகிய இருவரும், இந்த ஆணை அறிக்கை கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.

இக்கொள்ளை நோய் முடிவுறவும், நோயாளிகள் குணம் பெறவும், இதில் இறந்தவர்கள் இறைசாந்தியைப் பெறவும் செபிக்கின்ற கத்தோலிக்கர் அனைவருக்கும் இப்பலன்களை அறிவித்துள்ளது, அந்த அலுவலகம்.

இப்போதைய சூழலின் கடுமையை முன்னிட்டு, குறிப்பாக, இத்தொற்றுக்கிருமி அதிகமாகப் பரவியுள்ள இடங்களில் வாழும் விசுவாசிகளுக்கு, ஒப்புரவு அருளடையாளம் பெறுவதற்கு முன்னரே, பாவமன்னிப்பு வழங்கப்படுகின்றது என்று அவ்வறிக்கை கூறுகிறது. 

ஒருவர் இவ்வுலக வாழ்வில் பாவத்தினால் விளைந்த தண்டனையிலிருந்து விடுபடச் செய்யும் பரிபூரண பலன்களைப் பெறுவதற்கு, ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற்று, திருப்பலியில் பங்குகொண்டு திருநற்கருணை வாங்க வேண்டும், திருத்தந்தையின் கருத்துக்காகச் செபிக்க வேண்டும். இவற்றை முடிந்த அளவு விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

இணையதளம் வழியாக திருப்பலியில் பங்குபெற்று, விசுவாச அறிக்கை, இயேசு கற்றுக்கொடுத்த செபம், அன்னை மரியாவிடம் செபம், இன்னும், இந்த சோதனையை விசுவாச உணர்வில் ஒப்புக்கொடுத்து, தங்கள் சகோதரர், சகோதரிகள் மீது பிறரன்புடன் நடந்துகொள்பவர்களுக்கும் பரிபூரண பலன்கள் உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தன் நண்பர்களுக்காக தன் உயிரை அளிப்பதைவிட மேலான அன்பு இல்லை என்ற கிறிஸ்துவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டியுள்ள அந்த அலுவலகம், கோவிட்-19 தொற்றுக்கிருமி நோயாளர்களைப் பராமரிக்கும் பணியிலுள்ள, நலப்பணியாளர்கள் மற்றும், குடும்ப உறுப்பினர்களுக்கும் இப்பலன்களை வழங்கியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 March 2020, 15:43