தேடுதல்

Vatican News
கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே 

கோவிட்-19: ஏழை நாடுகளின் கடனை மன்னிக்க அழைப்பு

ஏழை நாடுளின் கடன்கள் மன்னிக்கப்படுவது மட்டும் போதாது, இராணுவத்திற்கென செலவிடப்பட்டுவரும் வளங்கள், கல்வி, வீட்டுவசதி, மற்றும், உணவுத் தேவைகளை நிறைவு செய்வதற்கென ஒதுக்கப்படவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

பெரும் அளவு கடன் சுமைகளால் துன்பங்களை அனுபவித்துவரும் ஏழை நாடுகளின் கடனை பணக்கார நாடுகள் மன்னிக்க வேண்டிய சிறப்பு யூபிலி ஆண்டு இது என அறிவித்துள்ளார், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.

சிறப்பு யூபிலி ஆண்டுகளில் மற்றவர்களின் கடன்கள் மன்னிக்கப்படும் நிலையில், இந்த கோவிட-19 தொற்றுநோய் காலத்தை சிறப்பு யூபிலி ஆண்டாக கருதி, ஏழை நாடுகளின் கடன் சுமைகள் அகற்றப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார், நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் தலைவர், கர்தினால் தாக்லே.

கொரோனா தொற்றுக் கிருமிக்கு எதிரான போராட்டத்தில் ஏழை நாடுகள் வெற்றியடைய உதவும் வண்ணம், அவற்றின் கடன்கள் மன்னிக்கப்பட்டு, புது வாழ்வுக்கு அவை திரும்பிட உதவவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார், கர்தினால் தாக்லே.

முகக் கவசங்கள் இல்லாத ஒரு சூழலில், இவ்வுலகில் கணக்கின்றி குண்டுகள் உள்ளன என்ற கவலையை வெளியிட்ட கர்தினால், செயற்கை சுவாசக் கருவிகளின் பற்றாக்குறையுள்ள இவ்வுலகில், கோடிக்கணக்கான டாலர்களை, மக்களைத் தாக்கும் விமானங்களுக்கென செலவிட்டு வருகிறோம் என்று கூறினார்.

ஏழை நாடுகள் போதிய வளங்களின்றி வாடுவது, அவர்கள் கல்லறை நோக்கிச் செல்வதற்கு ஈடாகும் என்பதை மனதில்கொண்டு, ஏழை நாடுகளின் கடன்களை மன்னிக்க பணக்கார நாடுகள் முன்வரவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்தார் கர்தினால் தாக்லே.

ஏழை நாடுளின் கடன்கள் மன்னிக்கப்படுவது மட்டும் போதாது, இராணுவத்திற்கென செலவிடப்பட்டுவரும் வளங்கள், கல்வி, வீட்டு வசதி, மற்றும், உணவு தேவைகளை நிறைவு செய்வதற்கென ஒதுக்கப்படவேண்டும் எனவும், அழைப்புவிடுத்தார் கர்தினால் தாக்லே.

31 March 2020, 14:22