தேடுதல்

Vatican News
புனித பூமியில் கர்தினால் சாந்த்ரி புனித பூமியில் கர்தினால் சாந்த்ரி 

புனித பூமிக்காக கர்தினால் சாந்த்ரியின் விண்ணப்பம்

கிறிஸ்தவ மத நம்பிக்கையின் ஆணிவேராக விளங்கும் புனித பூமியின் திருத்தலங்களைப் பாதுகாக்கவும், அவற்றின் வழியே, நம் மீட்பின் வரலாற்றை மீண்டும், மீண்டும் நினைவுகூரவும், மக்கள் வழங்கும் நிதி உதவி பெரிதும் உதவும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்க இறையியலிலும், கணிதம், மற்றும், இயற்பியலிலும் அறிஞராக விளங்கிய பிளேஸ் பாஸ்கால் (Blaise Pascal) அவர்கள், "உலகம் முடியும்வரை, இயேசுவின் பாடுகள் தொடரும், எனவே, இவ்வேளையில் நாம் உறங்கக்கூடாது" என்று, கூறிய சொற்களுடன், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஒரு சிறப்பு விண்ணப்ப மடலை வெளியிட்டுள்ளார்.

"புனித பூமியின் நற்பணிகளுக்காக" என்ற கருத்துடன், ஒவ்வோர் ஆண்டும், புனித வெள்ளியன்று, ஆலயங்களில் திரட்டப்படும் நிதி உதவிக்காக, கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவரான கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள், விண்ணப்ப மடல் ஒன்றை, மார்ச் 4, இப்புதனன்று அனுப்பியுள்ளார்.

போர், பட்டினி, பாகுபாடு, தனிமை, நோய் என்ற பல்வேறு துன்பங்களில் மக்கள் சிக்கியிருக்கும் வரை, இயேசுவின் பாடுகள் இவ்வுலகில் தொடர்கின்றன என்பதை, கர்தினால் சாந்த்ரி அவர்கள், இம்மடலின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2019ம் ஆண்டு, ஏப்ரல் 19ம் தேதி, புனித வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரின் கொலோசெயம் திடலில் தலைமையேற்று நடத்திய சிலுவைப்பாதை பக்தி முயற்சியில், "இவ்வுலகின் ஒவ்வொரு தீமையையும், சாவையும் உமது உயிர்ப்பு வெற்றிகொண்டுள்ளது என்ற நம்பிக்கையை எங்களுக்குள் புதுப்பித்தருளும்" என்று வேண்டிக்கொண்டதை, கர்தினால் சாந்த்ரி அவர்கள் தன் மடலில் மேற்கோளாகக் கூறியுள்ளார்.

இயேசுவின் வாழ்வு, பாடுகள், மரணம் ஆகிய மறையுண்மைகளை நேரடியாக அனுபவித்த புனித பூமியின் பல்வேறு பகுதிகளைக் குறித்து, கர்தினால் சாந்த்ரி அவர்கள் தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

புனித பூமியிலிருந்து நம் நம்பிக்கையின் அடித்தளத்தை பெற்றுள்ள கிறிஸ்தவ உலகம், அந்தப் புனித பூமியிலிருந்து பெற்றுக்கொண்ட கொடைகளுக்கு பதிலிருப்பாக, எருசலேம் நகரையும், புனித பூமியின் பல்வேறு முக்கிய தலங்களையும் பாதுகாக்க, உதவிகள் செய்யவேண்டும் என்று, கர்தினால் சாந்த்ரி அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

பல நூற்றாண்டுகளாக புனித பூமியில் நிகழ்ந்துள்ள மோதல்களையும், அங்கு வாழ்ந்துவரும் மக்கள் அடைந்துவரும் வேதனைகளையும் நாம் அறிவோம் என்று கூறும் கர்தினால் சாந்த்ரி அவர்கள், இன்றும், இந்த வேதனைகளும், மோதல்களும் தொடர்கின்றன என்பதை, வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, புனித பூமியின் ஒரு சில பகுதிகளில் வாழும் குழந்தைகளும், இளையோரும், அமைதியற்ற ஒரு சூழலில் தொடர்ந்து வாழ்ந்து வருவதைக் குறித்து தன் மடலில் குறிப்பிட்டுள்ள கர்தினால் சாந்த்ரி அவர்கள், புனித பூமியில் வாழும் அனைவரும், தங்கள் குடும்பத்துடன் அமைதியாக வாழும் வழிமுறைகளை அமைக்க, அனைவரின் உதவியும் தேவை என்று எடுத்துரைத்துள்ளார்.

கிறிஸ்தவ மத நம்பிக்கையின் ஆணிவேராக விளங்கும் புனித பூமியின் திருத்தலங்களைப் பாதுகாக்கவும், அவற்றின் வழியே, நம் மீட்பின் வரலாற்றை மீண்டும், மீண்டும் நினைவுகூரவும், மக்கள் வழங்கும் நிதி உதவி பெரிதும் உதவும் என்று, கர்தினால் சாந்த்ரி அவர்கள், தன் விண்ணப்ப மடலை நிறைவு செய்துள்ளார்.

04 March 2020, 15:05