தேடுதல்

Vatican News
ஆப்கானிஸ்தான் மாற்றுத்திறனாளி ஆப்கானிஸ்தான் மாற்றுத்திறனாளி  (AFP or licensors)

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காக திருப்பீடத்தின் குரல்

திறனற்ற மக்களின் மனிதாபிமான மற்றும் ஆன்மீக வளங்களை நோக்காமல், அவர்களை ஓரங்கட்டப்பட்ட மக்களாக நோக்கும் மனநிலை குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருப்பீடம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

திறனற்றவர்கள் என சமூகத்தால் கருதப்படும் மக்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகின்றபோதிலும், அவர்களின் வாழ்வை மதிப்பது குறித்து, சமுதாயத்தில் நிலவும் எதிர்மறைக்கண்ணோட்டம், பெரும் தடையாக உள்ளது என, ஐ.நா. அவைக்கூட்டத்தில் உரையாற்றினார், திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் இவான் யுர்கோவிச்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகச் பங்கேற்கும் பேராயர் யுர்கோவிச் அவர்கள், திறமையற்றவர்கள், மற்றும், மாற்றுத்திறனாளிகளின் அனைத்து விதமான உரிமைகள் குறித்து, ஐ.நா. அலுவலகத்தில், கடந்த வெள்ளியன்று உரையாற்றியபோது, இவ்வாறு கூறினார்.

இன்றைய உலகம், திறனற்ற மக்களின் மனிதாபிமான மற்றும் ஆன்மீக வளங்களை நோக்காமல், அவர்கள் சமூகத்திற்கு வழங்கும் பங்களிப்பை மனதில்கொண்டு, அவர்களை ஓரங்கட்டப்பட்ட மக்களாக நோக்கும் மனநிலை குறித்து, பேராயர் யுர்கோவிச் அவர்கள், ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.

மனிதனின் மாண்பு, கருவில் உருவானது முதல், இயற்கை மரணம் வரை மதிக்கப்பட வேண்டும், மற்றும், மருத்துவ அக்கறையும் காட்டப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார், திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் யுர்கோவிச்.

மாற்றுத்திறனாளிகள் பிறப்பதற்கே தகுதியற்றவர்கள் என்ற நோக்கத்தில், கருக்கலைத்தல்கள் அனுமதிக்கப்படுவது குறித்தும், கருணைக்கொலைகள் குறித்தும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட பேராயர் யுர்கோவிச் அவர்கள், மாற்றுத்திறனாளிகள், அல்லது, திறனற்றோர், வாழ்வில் உயிரூட்டத்துடன் பங்குபெறுவதற்குரிய தடைகள் அகற்றப்படவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

02 March 2020, 15:39