தேடுதல்

Vatican News
புனித பேதுரு பெருங்கோவிலில் அன்னை மரியாவிடம் செபிக்கும் கர்தினால் ஆஞ்செலோ கொமாஸ்த்ரி புனித பேதுரு பெருங்கோவிலில் அன்னை மரியாவிடம் செபிக்கும் கர்தினால் ஆஞ்செலோ கொமாஸ்த்ரி  (Vatican Media)

வத்திக்கானில் தினமும் அன்னை மரியாவின் பிரார்த்தனை

கொரோனா நெருக்கடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற, உலகெங்கும், மக்கள் செபமாலை செபிப்பதற்கு உந்துதலாக, அமெரிக்க ஐக்கிய நாட்டின் கத்தோலிக்க பங்கு ஒன்றில், வாரம் முழுவதும் செபமாலையைச் செபிக்கும் புதிய முயற்சி ஆரம்பம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தையின் சார்பில் வத்திக்கான் நகரை வழிநடத்தும் பொறுப்பில் பணியாற்றும் கர்தினால் ஆஞ்செலோ கொமாஸ்த்ரி அவர்கள், மார்ச் 11, இப்புதன் முதல், ஒரு வாரத்திற்கு, ஒவ்வொரு நாளும் நண்பகல் 12 மணிக்கு, நண்பகல் மூவேளை செபத்தை, ஞாயிறு தவிர, மற்ற நாள்களில் வழிநடத்துகிறார். 

கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடியிலிருந்து இவ்வுலகைக் காக்க மேற்கொள்ளப்படும் இந்த மூவேளை செபத்துடன், அன்னை மரியாவின் பிரார்த்தனை மற்றும், 'சால்வே ரெஜினா' எனப்படும் அன்னை மரியாவின் புகழுரை மற்றும் மன்றாட்டு ஆகியவை ஒவ்வொரு நாளும் சொல்லப்படும் என்றும், இந்த செப முயற்சிகள், வத்திக்கான் ஊடகத்தின் வழியே நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்நெருக்கடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற, உலகெங்கும் மக்கள் செபமாலை செபிப்பதற்கு உந்துதலாக, அமெரிக்க ஐக்கிய நாட்டின் Connecticut நகரின் புனித Roch கத்தோலிக்க பங்கில், வாரம் முழுவதும் செபமாலையைச் செபிக்கும் புதிய முயற்சியொன்று, மார்ச் 9, இத்திங்களன்று துவக்கப்பட்டது.

ஏறத்தாழ 100 நாடுகளில் பரவியுள்ள கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடியால் உருவாகியுள்ள அச்சம், கவலை, திகில் ஆகிய எதிர்மறை உணர்வுகளுக்கு மாற்றாக, அன்னை மரியாவின் பரிந்துரையை நாடவேண்டும் என்ற எண்ணத்துடன், “The Rosary Network” என்ற அமைப்பு, இந்த முயற்சியைத் துவக்கியுள்ளது என்று Zenit கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

பாத்திமா நகரில் அன்னை மரியாவின் காட்சியைக் கண்டவர்களில் ஒருவரும், இறையடியாருமான அருள் சகோதரி லூசியா அவர்கள், "செபமாலையை செபிப்பதன் வழியே, இவ்வுலகில், தீர்க்கமுடியாத பிரச்சனைகள் என்று எதுவும் இல்லை" என்று கூறியதை அடிப்படையாகக் கொண்டு, “The Rosary Network” என்ற அமைப்பு, இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. (REI / Zenit)

11 March 2020, 15:15