தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன் கர்தினால் தாக்லே திருத்தந்தையுடன் கர்தினால் தாக்லே 

திருத்தந்தையால் வரலாற்றை செம்மைப்படுத்த முடியும்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இறைவனின் அருகாமையையும் கருணையையும் வெளிப்படுத்தும் ஓர் உவமையாக நான் பார்க்கிறேன் - கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நவீன கால மனித குல வரலாற்றை மாற்றியமைக்கும் வலிமையுடைய ஒருவராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, பலரும் சரியாகக் கணித்துள்ள அதேவேளை, அவரை, இறைவனின் அருகாமையையும் கருணையையும் வெளிப்படுத்தும் ஓர் உவமையாகவும் தான் பார்ப்பதாக, கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.

திருஅவையை இவ்வுலகில் வழிநடத்திச் செல்ல, 2013ம் ஆண்டு, மார்ச் மாதம் 13ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதன் 7ம் ஆண்டு நிறைவு, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்படுவதையொட்டி, வத்திக்கான் செய்திக்கு பேட்டியளித்த, நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் புதியத் தலைவர், கர்தினால் தாக்லே அவர்கள், இறை இரக்கம், மற்றும், அருகாமையின் உருவகமாக விளங்கும் திருத்தந்தையால், வரலாற்றை செம்மைப்படுத்த முடியும் என்றார்.

கர்தினால் பெர்கோலியோ அவர்கள், 2013ம் ஆண்டு, திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில், அனைத்து கர்தினால்களும் மகிழ்ந்து ஆரவாரம் செய்தபோது, புதியத் திருத்தந்தை மட்டும், இறைவிருப்பத்தை ஏற்கும் கீழ்ப்படிதல் என்ற மனநிலையைக் காட்ட, தன் தலையை தாழ்த்தி நின்றது, தன்னை மிகவும் கவர்ந்தது எனவும் கூறினார், கர்தினால் தாக்லே.

தான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்த ஒவ்வொரு வேளையிலும், தன் பெற்றோரின் நலம்குறித்து முதலில் கேட்டார் என்று கூறிய கர்தினால் தாக்லே அவர்கள், தனி மனிதர்கள் மீது அக்கறையுடன் செயல்படுவதும், தான் மீட்பர் அல்ல, ஒரு பணியாளே என்பதை உணர்ந்து செயல்படுவதும் திருத்தந்தையிடமிருந்து தான் கற்றுக்கொண்டவை என்றார்.

திருத்தந்தையைப்போல், ஏழைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் துன்பங்கள் நம் இதயங்களை வேதனைப்படுத்த அனுமதிக்கும்போது, அது நம்மை செபத்திற்கு அழைத்துச் சென்று, ஏழைகள் வழியாக இறைவன் பேசுவதை நம்மைக் கேட்க வைக்கும் எனவும், தன் பேட்டியில் எடுத்துரைத்தார், கர்தினால் தாக்லே.

12 March 2020, 14:57