தேடுதல்

Vatican News
அரியவகை நோயால் பாதிக்கப்பட்டோருடன் திருத்தந்தை (கோப்பு படம்) அரியவகை நோயால் பாதிக்கப்பட்டோருடன் திருத்தந்தை (கோப்பு படம்)  (Vatican Media)

அரிய நோய் உலக நாளுக்கு கர்தினால் டர்க்சன் செய்தி

அரியவகை நோய்களில் 72 விழுக்காடு, மரபணு சார்ந்தது. இவற்றில் 70 விழுக்காடு குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பிக்கிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அரிய நோய் உலக விழிப்புணர்வு நாளுக்கென, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், பிப்ரவரி 29 இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்நோய்களைக் கண்டறிவது, பல நேரங்களில் கடினமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடுகளில், குறிப்பாக, நலவாழ்வு அமைப்பு மிக மோசமாக உள்ள நாடுகளில், இந்நோயாளிகளும், இவர்களின் குடும்பத்தினரும், மனக்காயம், தனிமை, இன்னல்களால் மனச்சோர்வு, உதவியற்ற உணர்வு போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, கர்தினால் டர்க்சன் அவர்களின் செய்தி கூறுகிறது.

இன்று உலகில், மூன்று இலட்சத்திற்கு அதிகமானோர், அரிய நோய்களால் தாக்கப்பட்டுள்ளனர் என்றும், அரிய நோய் வகைகளில், அறிவியல் ஆய்வு முக்கிய இடம் வகிக்கின்றது என்றும் கூறியுள்ளார், கர்தினால் டர்க்சன்.

மருந்து தொழில் நிறுவனங்களும், அறிவியல் ஆய்வுகளும், அறிவுச் சொத்து காப்பீடு போன்ற சொந்த சட்டங்களுக்கு உட்பட்டிருந்தாலும், அரிய நோய்கள் குறித்து கண்டறிவதற்கும், அவற்றிற்கு சிகிச்சை அளிப்பதற்கும் சரியான கூறுகளைக் கண்டறிய வேண்டும் என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

இந்நோயாளிகள் பல நேரங்களில் மனிதமாண்பை இழந்து துன்புறுவதால், அரிய வகை நோய்கள் குறித்த ஆய்வுகள் நடைபெற வேண்டும், அந்நோயாளிகளுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு, அன்புடன் நடத்தப்பட வேண்டும் என்றும், கர்தினாலின் செய்தி கூறுகிறது. 

"அரிய என்பது, பல. அரிய என்பது, உறுதியானது. அரிய என்பது, பெருமைக்குரியது" என்ற தலைப்பில், அரிய நோய் உலக விழிப்புணர்வு நாள், பிப்ரவரி 29 இச்சனிக்கிழமையன்று உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது.

அரியவகை நோய்களால் உலகில் 3.5 விழுக்காட்டு மக்கள் முதல், 5.9 விழுக்காட்டு மக்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்களில் 72 விழுக்காடு, மரபணு சார்ந்தது. இவற்றில் 70 விழுக்காடு குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பிக்கிறது.

ஐரோப்பாவில் இரண்டாயிரம் பேருக்கு ஒருவர், இந்நோயால் தாக்கப்பட்டுள்ளனர்

29 February 2020, 15:16