தேடுதல்

Vatican News
பேராயர் காலகர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சந்திப்பு பேராயர் காலகர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சந்திப்பு 

ஆயர்கள் நியமனம் குறித்து, திருப்பீடமும் சீனாவும்..

1951ம் ஆண்டில், சீனா, திருப்பீட தூதரை வெளியேற்றியதைத் தொடர்ந்து, திருப்பீடம் சீனாவுடன் தூதரக உறவுகளை முறித்துக்கொண்டது. அதற்குப்பின், பிப்ரவரி 14, இவ்வெள்ளியன்று, முதன்முறையாக, இவ்விரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்துள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆயர்கள் நியமனம் குறித்து, 2018ம் ஆண்டில், திருப்பீடத்திற்கும், சீன மக்கள் குடியரசுக்கும் இடையே உருவான ஒப்பந்தம் குறித்து, பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) அவர்களும் சந்தித்து உரையாடினர்.

ஜெர்மனியின் மியுனிச் நகரில் பிப்ரவரி 14, இவ்வெள்ளியன்று துவங்கிய, பன்னாட்டு பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றிருந்த, பேராயர் காலகர் அவர்களும், வாங் யி அவர்களும் தனியே சந்தித்து, கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி, சீனாவில் ஆயர்கள் நியமனம் குறித்து கையெழுத்திடப்பட்ட தற்காலிக ஒப்பந்தம் குறித்து கலந்துரையாடினர்.

ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்குப்பின், இவ்விரு நாடுகளின், இந்த உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்த இந்நிகழ்வு குறித்து, திருப்பீட செயலகம் வெளியிட்ட அறிக்கையை, இவ்வெள்ளி மாலையில் செயதியாளர்களிடம் அறிவித்த, திருப்பீட தகவல் தொடர்பகம், இச்சந்திப்பு இதமான சூழலில் இடம்பெற்றது என்றும், இவ்விரு நாடுகளுக்கும் இடையே உறவுகளில் இடம்பெற்றுவரும் முன்னேற்றங்கள் பற்றி கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றன என்றும் கூறியது.

இந்த சந்திப்பில், ஆயர்கள் நியமனம் குறித்து கையெழுத்தான தற்காலிக ஒப்பந்தம், முக்கிய இடம்பெற்றது என்றும், சீனாவில் கத்தோலிக்கத் திருஅவையின் வாழ்வு மற்றும், சீன மக்களின் நலனை ஊக்குவிப்பதற்கு, இவ்விரு நாடுகளுக்கு இடையே உரையாடல் தொடர்ந்து இடம் பெறுவதற்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கிருமி மேலும் பரவாமல் தடை செய்வதற்கு சீன அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கும், மக்களின் ஒருமைப்பாட்டுணர்வுக்கும் திருப்பீடத்தின் சார்பில், பேராயர் காலகர் அவர்கள் பாராட்டு தெரிவித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலகில் அமைதியை பேணி வளர்ப்பதற்கு, உலகளாவிய ஒத்துழைப்பில் அதிகம் பங்கு கொள்வதற்கும், கலாச்சாரங்களுக்கு இடையே உரையாடல் மற்றும், மனித உரிமைகள் பற்றி கவனத்தில் கொள்வதற்கும், இருதரப்பும் தங்களின் ஆவலைத் தெரிவித்தன என்றும், திருப்பீட தகவல் தொடர்பகம் கூறியது.

இதற்கிடையே, கொரோனா தொற்றுக்கிருமி மேலும் பரவாமல் தடைசெய்யும் நடவடிக்கைகளுக்கென, வத்திக்கான், கடந்த சனவரி மாதம் 27ம் தேதி முதல், சீனாவின் மூன்று மாநிலங்களுக்கு, 6 இலட்சம் முதல் 7 இலட்சம், வாய்க் கவசங்களை, அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மியுனிச் நகரில் இவ்வெள்ளியன்று துவங்கிய பாதுகாப்பு கருத்தரங்கில், ஏறத்தாழ 35 நாடுகள் மற்றும், அரசுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

15 February 2020, 14:07