தேடுதல்

Vatican News
மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் பிள்ளை மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் பிள்ளை  

தேவசகாயம் பிள்ளையின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமை ஏற்பு

தமிழகத்தில் 18ம் நூற்றாண்டில், கத்தோலிக்கத்திற்கு மனம் மாறிய இந்து மதத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை உட்பட, இருவரை புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கு திருத்தந்தை ஒப்புதல் தெரிவித்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் பிள்ளை அவர்கள் உட்பட, மேலும் இருவரின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 21, இவ்வெள்ளியன்று அங்கீகரித்துள்ளார்.

புனிதர்நிலை பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பெச்சு அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, பிப்ரவரி 21, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து, இம்மூவரின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகள் பற்றிய விவரங்களைச் சமர்ப்பித்தார்.

அருளாளர் தேவசகாயம் பிள்ளை வரலாறு

அருளாளர் தேவசகாயம் பிள்ளை அவர்கள், இன்றைய குமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் என்னும் கிராமத்தில், 1712ம் ஆண்டு, ஏப்ரல் 23ம் நாளன்று, பாரம்பரிய இந்துமத நாயர் குலத்தில் பிறந்தார். நீலகண்ட பிள்ளை என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், டச்சு படைத்தலைவரான, கத்தோலிக்க மதத்தை சார்ந்த Benedictus De Lennoy என்பவரின் போதனையால் கத்தோலிக்கத்தைத் தழுவினார். திருமுழுக்கில் "தேவசகாயம்" என்னும் பொருள்படும் "இலாசர்" (Lazarus) என்னும் பெயர் இவருக்குச் சூட்டப்பட்டது. இவர், கிறித்தவ விசுவாசத்தில் உறுதியாக இருந்ததால், கோபம்கொண்ட அரசர் மார்த்தாண்ட வர்மா அவர்கள், இவருக்கு மரண தண்டனைக்காக சிறையில் அடைத்தார். அவருடைய உடம்பில் கரும்புள்ளியும், செம்புள்ளியும் குத்தப்பட்டன. கைகள் பின்புறமாக கட்டப்பட்டு கழுத்தில் எருக்கம் பூ மாலை அணிவிக்கப்பட்டு, எருமை மாட்டின் மீது பின்னோக்கி அமரவைத்து அவரை கேவலப்படுத்தும்படியாகவும் கிறிஸ்தவத்திற்கு மாறினால் இப்படித்தான் மற்றவருக்கும் இருக்கும் என்பதற்குப் பாடமாகவும், அவரை ஊர் ஊராக அழைத்துச் சென்றார்கள். 1752ம் ஆண்டு, சனவரி மாதம் 14ம் தேதி, தென் திருவாங்கூர் மன்னராக ஆட்சிசெய்த மார்த்தாண்ட வர்மா காலத்தில், குமரி மாவட்டத்தில், ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலை என்னும் இடத்தில், தேவசகாயம் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார். மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் பிள்ளை அவர்களின் கல்லறை, கோட்டாறு மறைமாவட்ட சவேரியார் முதன்மைக் கோவிலில் உள்ளது. 2012ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி இவர் அருளாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இவரை அதிகாரப்பூர்வமாகப் புனிதராக அறிவிப்பதற்கு வழியமைக்கும், இவரின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிப்ரவரி 21, இவ்வெள்ளியன்று அங்கீகரித்துள்ளார்.  

இறைஊழியர் Carlo Acutis

இன்னும், இங்கிலாந்தில் 1991ம் ஆண்டு பிறந்து இத்தாலியில் 2006ம் ஆண்டில் உயிரிழந்த, பொதுநிலையினரான இறைஊழியர் Carlo Acutis, இத்தாலியரான, Loano கப்புச்சின் மூன்றாம் அருள்சகோதரிகள் சபையைத் தொடங்கிய அருளாளர் Maria Francesca di Gesù  ஆகிய இருவரின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகளையும் திருத்தந்தை அங்கீகரித்தார்

மறைசாட்சி Rutilio

எல் சால்வதோர் நாட்டில் 1977ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி கொல்லப்பட்ட, இயேசு சபை அருள்பணியாளர் மறைசாட்சி Rutilio Grande García, அவரோடு சேர்ந்து கொல்லப்பட்ட அவரது இரு பொதுநிலைத் தோழர்கள் ஆகியோரின் புண்ணிய வாழ்வு  பற்றிய விவரங்களையும், கர்தினால் பெச்சு அவர்கள், திருத்தந்தையிடம் சமர்ப்பித்து இசைவு பெற்றார்.

மேலும், இத்தாலியின் கியோஜ்ஜாவில் 1842ம் ஆண்டில் பிறந்தவரும், வியாகுல அன்னை ஊழியர் சகோதரிகள் சபையை ஆரம்பித்தவருமான இறைஊழியர் அருள்பணி Emilio Venturini, இத்தாலியின் கூப்பியோவில் 1884ம் ஆண்டில் பிறந்த இறைஊழியர் அருள்பணி Pirro Scavizzi, இத்தாலியின் வெரோனாவில் 1888ம் ஆண்டில் பிறந்த இயேசு கிறிஸ்து திருக்காயங்கள் சபையின் அருள்பணி இறைஊழியர் Emilio Recchia, தென் அமெரிக்காவின் சிலே நாட்டில், 1931ம் ஆண்டில் பிறந்த இறைஊழியர் Mario Hiriart Pulido ஆகிய நால்வரின் நற்பண்புகள் நிறைந்த வாழ்வு பற்றிய விவரங்களையும், கர்தினால் பெச்சு அவர்கள், திருத்தந்தையிடம் சமர்ப்பித்து இசைவு பெற்றார்.

22 February 2020, 14:44