தேடுதல்

Vatican News
விவிலியம் விவிலியம் 

சனவரி 26, "இறைவார்த்தை ஞாயிறு"

2019ம் ஆண்டு அக்டோபர் நிலவரப்படி, விவிலியம் முழுவதும் 698 மொழிகளிலும், விவிலியத்தின் சில பகுதிகள், குறைந்தது 3,385 மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு, அதாவது சனவரி 26ம் தேதி சிறப்பிக்கப்படும் "இறைவார்த்தை ஞாயிறு", கடவுள் மற்றும், அவரது வார்த்தை மீது ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்தி, அன்புசெலுத்தி, பிரமாணிக்கத்துடன் சாட்சிபகர நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

இஞ்ஞாயிறு குறித்து பேசியுள்ள, புதியவழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவைத் தலைவர் பேராயர் ரீனோ பிசிக்கெல்லா அவர்கள், இறைவார்த்தையைக் கொண்டாடி, அதை ஆழ்ந்து படித்து, உள்வாங்கி, பரப்புவதற்கென அர்ப்பணிக்கப்பட்ட இந்த சிறப்பான நாள், நம் வாழ்வில் இறைவார்த்தை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்வதற்கு உதவுகின்றது என்று கூறியுள்ளார்.  

உலகில் அதிகம் விநியோகம் செய்யப்பட்டுள்ள நூலே திருவிவிலியம் எனவும், இந்நூல் நம் கைகளில் இல்லாததால், அது நன்கு பத்திரப்படுத்தப்பட்டு தூசு படிந்துள்ளதாக உள்ளது என்றும், பேராயர் பிசிக்கெல்லா அவர்கள் கூறியுள்ளார்.

அனைத்து மறைமாவட்டங்களும், பங்குத்தளங்களும் இறைவார்த்தை ஞாயிறை மிகுந்த படைப்பாற்றலுடனும், புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளுடனும் இஞ்ஞாயிறைக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவார்த்தை ஞாயிறு பற்றி, 2019ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி, "Aperuit illis" என்ற தலைப்பில், தன் சொந்த விருப்பத்தின்பேரில் வெளியிடும், Motu proprio அறிக்கையின் வழியாக அறிவித்தார்.

திருவிவிலியத்தின் பெரும்பகுதியை இலத்தீனில் மொழி பெயர்த்த புனித ஜெரோம் அவர்கள் இறைபதம் அடைந்ததன் 1,600ம் ஆண்டு நிறைவு 2019ம் ஆண்டில் நினைவுகூரப்பட்டது. "மறைநூலை அறியாதவர், கிறிஸ்துவை அறியாதவர்" என்று சொன்னவர், புனித ஜெரோம்.

2019ம் ஆண்டு அக்டோபர் நிலவரப்படி, விவிலியம் முழுவதும் 698 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதோடு, புதிய ஏற்பாடு மட்டும் 1,548 மொழிகளிலும், விவிலியத்தின் சில பகுதிகள் அல்லது கதைகள் மேலும் 1,138 மொழிகளிலும், விவிலியத்தின் சில பகுதிகள் குறைந்தது 3,385 மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. (Agencies)

11 January 2020, 14:45