தேடுதல்

Vatican News
திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர்  

"ஐரோப்பாவை இணைந்து கட்டுதல்" கருத்தரங்கில் பேராயர் காலகர்

Strasbourg பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில், "ஐரோப்பாவிற்கு இன்றைய தொலைநோக்கு என்ன?" என்ற தலைப்பில் பேராயர் காலகர் அவர்கள், துவக்க உரையாற்றினார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஐரோப்பிய அவையில் திருப்பீடம் ஓர் உறுப்பினராக இணைந்து 50 ஆண்டுகள் நிறைவேறுவதும், மனித உரிமைகள் ஐரோப்பிய ஒப்பந்தம் உருவானதன் 70 ஆண்டுகள் நிறைவேறுவதும், 2020ம் ஆண்டில், இடம்பெறுகின்றன என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஐரோப்பிய அவையில், திருப்பீடம்

ஐரோப்பிய அவையில், திருப்பீடம் இணைந்ததன் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம், Strasbourg பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

"ஐரோப்பாவை இணைந்து கட்டுதல்" என்ற தலைப்பில், சனவரி 7, இச்செவ்வாய் முதல், 9, இவ்வியாழன் முடிய Strasbourg பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இக்கருத்தரங்கில், "ஐரோப்பாவிற்கு இன்றைய தொலைநோக்கு என்ன?" என்ற தலைப்பில், பேராயர் காலகர் அவர்கள், இச்செவ்வாயன்று, துவக்க உரையாற்றினார்.

மனித உரிமைகள் ஐரோப்பிய ஒப்பந்தம்

1948ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலக மனித உரிமைகள் ஒப்பந்தம் ஐ.நா. அவையில் உருவானதையடுத்து, 1950ம் ஆண்டில் மனித உரிமைகள் ஐரோப்பிய ஒப்பந்தம் உருவாகி, இந்த உரிமைகளைக் குறித்து கூடுதல் தெளிவுகளை ஏற்படுத்தியதை, பேராயர் காலகர் அவர்கள் தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

மனித உரிமைகளை வளர்ப்பதன் வழியே, குடியரசையும், சட்டங்களுக்கு உட்பட்ட சமுதாயத்தையும் முன்னேற்ற முடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2014ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி, ஐரோப்பிய அவையில் கூறிய சொற்களை, பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் நினைவுகூர்ந்தார்.

கிறிஸ்தவ விழுமியங்களின் அடித்தளத்தில்

கிறிஸ்தவ விழுமியங்கள் என்ற அடித்தளத்தில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகள், இறைவனையும், ஆன்மாவையும் இழந்து, வறண்டுபோன சில சட்டங்களை மையப்படுத்தி அரசு முடிவுகளை எடுப்பது, ஐரோப்பிய சமுதாயத்திற்கு உதவியாக இராது என்பதை, பேராயர் காலகர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகளை மதிப்பதும், மனித மாண்பை உயர்த்துவதும் ஐரோப்பாவின் தொலைநோக்கு பார்வையாக இருக்கவேண்டும் என்பதை, பேராயர் காலகர் அவர்கள், தன் உரையின் முதல் பகுதியில் விளக்கிக் கூறினார்.

மனித உரிமைகளையும், மனித மாண்பையும் நிலைநாட்டுவதற்கு, கல்வி, குடிபெயர்தல், பல்சமய உரையாடல், பன்முகக் கலாச்சாரம், நன்னெறி, அரசியல் என்ற வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை பேராயர் காலகரின் உரை விளக்கிக் கூறியது.

மனிதர்கள் மையப்படுத்தப்படும்போது...

ஐரோப்பாவின் அனைத்து அமைப்புக்களிலும் மனிதர்கள் மையப்படுத்தப்படும்போது, ஐரோப்பா, தன் நம்பிக்கையை மீண்டும் கண்டுகொள்ள முடியும் என்றும், மனித மையம், குடும்ப உணர்வு என்ற விழுமியங்கள் பின்பற்றப்பட்டால், அச்சமும், பாதுகாப்பற்ற நிலையும் நீங்கி, ஐரோப்பா, எதிர்காலத்தை, நம்பிக்கையோடு அணுகமுடியும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய சொற்களுடன், பேராயர் காலகர் அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.

08 January 2020, 15:24