தேடுதல்

கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில், சிறார் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் - அருள்பணி Zollner கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில், சிறார் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் - அருள்பணி Zollner 

திருத்தந்தையின் ஆணை, நல்லெண்ணங்களை உருவாக்கும்

வலுவற்ற சிறியோரைக் காப்பதற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டிசம்பர் 17ம் தேதி வெளியிட்ட ஆணை, நல்லெண்ணங்களை உருவாக்கும் - சிறார் பாதுகாப்பு திருப்பீட அவையின் உறுப்பினரான இயேசு சபை அருள்பணி Hanz Zollner

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வலுவற்ற சிறியோரைக் காப்பதற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டிசம்பர் 17ம் தேதி வெளியிட்ட ஆணை, நேர்மறை அதிர்வுகளை உருவாக்கும் என்று, சிறார் பாதுகாப்பு திருப்பீட அவையின் உறுப்பினரான இயேசு சபை அருள்பணி Hanz Zollner அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

உலக அரசுகளின் அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு, திருஅவையில் ஒளிவு மறைவற்ற நிலை, தவறு செய்தவர்கள் தண்டனை பெறுவது உறுதி என்ற நிலைப்பாடு, மற்றும் பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பு என்ற பல்வேறு வடிவங்களில், திருத்தந்தையின் ஆணை, நல்லெண்ணங்களை உருவாக்கும் என்று, அருள்பணி Zollner அவர்கள், கூறினார்.

உரோம் நகரில் இயேசு சபையினரால் நடத்தப்படும் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிறார் பாதுகாப்பு மையத்தின் இயக்குநராகப் பணியாற்றும் அருள்பணி Zollner அவர்கள், வலுவற்ற சிறியோரைக் காப்பதற்கென, திருத்தந்தை வெளியிட்டுள்ள இந்த ஆணையில் காணப்படும் ஒரு சில அம்சங்கள், அமெரிக்க ஐக்கிய நாடு போன்ற ஒரு சில நாடுகளில், தலத்திருஅவையால், ஏற்கனவே பின்பற்றப்படுகின்றன என்பதை எடுத்துரைத்தார்.

இவ்வாண்டு, பிப்ரவரி மாதம், உலக ஆயர்களின் பிரதிநிதிகள், வத்திக்கானில் கூடி, வலுவற்ற சிறியோரைக் காப்பது குறித்து, திருத்தந்தையுடன் மேற்கொண்ட சந்திப்பின் விளைவாக, இவ்வாண்டு ஜூன் 1ம் தேதி, திருப்பீடம் வெளியிட்ட புதிய அணைகளின் தொடர்ச்சியாக, தற்போது, திருத்தந்தை, மேலும் சில அம்சங்களை தெளிவாகக் கூறியுள்ளார் என்று, அருள்பணி Zollner அவர்கள், கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2019, 16:33