தேடுதல்

மிலான் நகரில் உள்ள 'ஓப்பெரா' (Opera) என்ற சிறைச்சாலையை சந்திக்கச் சென்ற கர்தினால் பரோலின் மிலான் நகரில் உள்ள 'ஓப்பெரா' (Opera) என்ற சிறைச்சாலையை சந்திக்கச் சென்ற கர்தினால் பரோலின் 

மிலான் சிறைச்சாலைக் கைதிகளை வாழ்த்திய கர்தினால் பரோலின்

மிலான் சிறைச்சாலையில் உள்ள கைதிகள், கடந்த 4 ஆண்டுகளில், 30 இலட்சத்திற்கும் அதிகமான நற்கருணை அப்பங்களை உருவாக்கி, உலகின் பல நாடுகளில் உள்ள பங்குத்தளங்களுக்கு அனுப்பியுள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிறைப்பட்டோருடன் திருஅவை நெருக்கம் கொண்டிருப்பது, வெறும் மனிதாபிமான உணர்வு மட்டுமல்ல, மாறாக, அது, இயேசுவின் சீடர்கள் அனைவருக்கும் உள்ள கடமை என்று திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், மிலான் நகரிலுள்ள சிறைக்கைதிகளிடம் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிறந்தநாளான டிசம்பர் 17, இச்செவ்வாயன்று, மிலான் நகரில் உள்ள 'ஓப்பெரா' (Opera) என்ற சிறைச்சாலைக்குச் சென்ற கர்தினால் பரோலின் அவர்கள், அங்குள்ள கைதிகளுக்கு, திருத்தந்தை, தன் சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகக் கூறினார்.

பின்னர், அங்குள்ள கைதிகளை தனித்தனியாகச் சந்தித்து, வாழ்த்துக்களைக் கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், திருப்பலியில் பயன்படுத்தப்படும் நற்கருணை அப்பங்களை, கைதிகள் உருவாக்கி வரும் ஒரு சிறு தொழிற்சாலையை ஆசீர்வதித்தார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி உருவாக்கப்பட்டு, "அப்பத்தின் பொருள்" என்ற பெயருடன் இயங்கிவரும் இத்தொழிற்சாலை, இதுவரை, 30 இலட்சத்திற்கும் அதிகமான அப்பங்களை உருவாக்கி, உலகின் பல நாடுகளில் உள்ள பங்குத்தளங்களுக்கு அனுப்பியுள்ளது.

"அப்பத்தின் பொருள்" என்ற பெயரில், மிலான் நகரில், சிறைக்கைதிகளைக் கொண்டு இயங்கிவரும் இத்தொழிற்சாலையைப் போல், மொசாம்பிக் நாட்டிலும் சிறைக்கைதிகளைக் கொண்டு நற்கருணை அப்பங்களை உருவாக்கும் ஒரு தொழிற்சாலை உருவாக்கப்பட்டு வருகிறது.

அதே வண்ணம், இஸ்பெயின் நாட்டில் மனித வர்த்தகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பெண்களைக் கொண்டும், இத்தாலியின் பொம்பெயி நகரில், மாற்றுத்திறனாளிகளைக் கொண்டும், இலங்கையில் இளம்பெண்களைக் கொண்டும், எத்தியோப்பியாவில் வீதிகளில் வாழும் சிறாரைக் கொண்டும் நற்கருணை அப்பங்கள் உருவாக்கும் சிறு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு வருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 December 2019, 15:33