தேடுதல்

Vatican News
உலகளாவிய காரித்தாஸ் நிறுவனத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே உலகளாவிய காரித்தாஸ் நிறுவனத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே  

திருவருகைக் காலம், அன்பு மற்றும், கொண்டாட்டத்தின் காலம்

நம் மத்தியில் ஒற்றுமை மற்றும், அண்பை வளர்ப்பதற்காக, படைத்தவராம் கடவுள், தம் மகனை அனுப்பிய மாபெரும் படைப்பாற்றலை, திருவருகைக் காலத்தின் நான்கு வாரங்களில் நினைவுகூர்கின்றோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

திருவருகைக் காலம், அன்பு, கொண்டாட்டம், காத்திருத்தல், நம் அயலவரை நினைப்பது, மற்றும், ஒன்றிணைந்து வாழ்வதில் வளரும் காலம் என்று, மனிலா பேராயரும், உலகளாவிய காரித்தாஸ் நிறுவனத்தின் தலைவருமான, கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், தன் திருவருகைக் காலச் செய்தியில் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு இதே திருவருகைக் காலத்தில், பங்களாதேஷிலுள்ள, மியான்மார் நாட்டின் ரொங்கியா புலம்பெயர்ந்த மக்களைச் சந்தித்ததை நினைவுகூர்ந்துள்ள கர்தினால் தாக்லே அவர்கள், புலம்பெயர்ந்த மக்களைப் போன்று, வருங்காலத்திற்காகவும், புலம்பெயர்ந்து வாழ்ந்த இயேசுவின் வருகைக்காகவும், காத்திருத்தலின் காலம், திருவருகைக் காலம் என்று குறிப்பிட்டுள்ளார்.

நம் மத்தியில் ஒற்றுமை மற்றும் அண்பை வளர்ப்பதற்காக, படைத்தவராம் கடவுள், தம் மகனை அனுப்பிய மாபெரும் படைப்பாற்றலை, திருவருகைக் காலத்தின் நான்கு வாரங்களில் நினைவுகூர்கின்றோம் என்று கூறியுள்ள கர்தினால் தாக்லே அவர்கள், காரித்தாஸ் நிறுவனமும், படைப்பாற்றல் என்ற தலைப்பில், பகிர்ந்து பயணிப்போம் என்ற உலகளாவிய வார நிகழ்வை நடத்துகின்றது என்று கூறியுள்ளார்.

நம் முன்னோர்கள், ஏழ்மை காரணமாக புலம்பெயர்ந்த வரலாறுகளையும், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள கர்தினால் தாக்லே அவர்கள், கிறிஸ்து தம் வருகையால், புதியனவற்றைக் கொணர்ந்தார், இந்த புதியனவற்றால், அவர், எப்போதும், நம் வாழ்வையும்,   குழுமங்களையும் புதுப்பிக்கிறார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்திருவருகைக் காலத்தில், கடவுள் நம்மிடம் வந்த அவரின் பயணத்தை நினைவுகூர்கிறோம், படைத்தவராம் கடவுள், கிறிஸ்துவை நம்மோடு பகிர்ந்துகொண்டுள்ளது போன்று, அவரும் தம் பயணத்தை நம்முடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார் என்று, கர்தினால் தாக்லே அவர்கள்,  தன் செய்தியில் தெரிவித்துள்ளார்.

03 December 2019, 15:26