தேடுதல்

Vatican News
அமேசான் உலக ஆயர்கள் மாமன்றம் அமேசான் உலக ஆயர்கள் மாமன்றம்  (AFP or licensors)

அமேசான் உலக ஆயர்கள் மாமன்றத்தின் 2வது பொது அமர்வு

நிலத்தடி நீர், வேதியப்பொருள்களால் மாசடையாவண்ணம், குறிப்பாக, பூர்வீக மக்களை அதிகம் பாதிக்கும் தொழிற்சாலை சுரங்கங்களால், அந்த நீர் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரசன்னத்தில், அக்டோபர் 07, இத்திங்கள் மாலையில் நடைபெற்ற, அமேசான் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தின் இரண்டாவது பொது அமர்வில், இம்மாமன்றத்தின் இறுதி அறிக்கையைத் தயார் செய்வதற்குரிய குழு மற்றும், தகவல் அளிக்கும் குழுவின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நான்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், மேலும் மூன்று பேரின் பெயர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருகின்ற நாள்களில் அறிவிப்பார் என அறிவிக்கப்பட்டது.

அதற்குப்பின், உரையாற்றிய மாமன்றத் தந்தையர், காலநிலை, தண்ணீர்,  வழிபாட்டுமுறைகளின் உரிமைகள், திருவருள்சாதனங்கள் ஆகிய தலைப்புக்களில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

காலநிலை

காலநிலை பற்றிய பகிர்வில், சுவீடன் நாட்டு இளம்பெண் கிரேட்டா துன்பர்க் அவர்களின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, காலநிலை மாற்றத்திற்கெதிராய்ச் செயல்படுவதில் இளையோர் முன்னணியில் நின்று செயல்படவேண்டியதன் முக்கியத்துவம் பற்றிய சிந்தனைகள் வழங்கப்பட்டன.

பொது நலத்திற்கு நன்மையைக் கொணரும் காலநிலை, வருங்காலத் தலைமுறைகளுக்காகப் பாதுகாக்கப்பட்டு, பேணப்பட வேண்டும் என்றுரைத்த மாமன்றத் தந்தையர், இயற்கை வளங்களிலுள்ள, நிலக்கரி, இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன்களைப் பயன்படுத்துவது, குறிப்பாக, புவி மண்டலம் மாசடைவதற்கு முக்கிய காரணிகளாக உள்ள, தொழிற்சாலைகள் மிக அதிகம் உள்ள நாடுகளில் அவை பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.

தண்ணீர்

நிலத்தடி நீர் வேதியப்பொருள்களால் மாசடையாவண்ணம், குறிப்பாக, பூர்வீக மக்களை அதிகம் பாதிக்கும் தொழிற்சாலை சுரங்கங்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுரைத்த மாமன்றத் தந்தையர், தண்ணீரைப் பாதுகாப்பது, பூர்வீக மக்கள் வாழ்வதற்கு உதவும் என்றும் கூறினர்.

பூர்வீக மக்களின் வழிபாடு

பூர்வீக மக்களின் வழிபாட்டு உரிமைகள் பற்றிக் குறிப்பிட்ட மாமன்றத் தந்தையர், மூடநம்பிக்கையோடு தொடர்பில்லாத அனைத்தையும் திருஅவை நன்மையாகவே கருதுகிறது, அதேநேரம், அது, உண்மையான திருவழிபாட்டு உணர்வோடு ஒத்திணங்கிச் செல்வதாய் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

இந்த உரைகளுக்குப் பின்னர் அந்த பொது அமர்வில், அருள்பணியாளர்கள் பற்றாக்குறையுள்ள இடங்களில், திருவருள்சாதனங்களை வழங்குவது குறித்து, இந்த மாமன்றத்தின் கலந்துரையாடலுக்குப் பரிந்துரைக்கப்பட்டு கூறுகளில் ஒன்றைப் பற்றி கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

08 October 2019, 16:31