Cerca

Vatican News
அமேசான் குறித்த உலக ஆயர்கள் மாமன்றம் அமேசான் குறித்த உலக ஆயர்கள் மாமன்றம் 

வாரம் ஓர் அலசல் – உலக ஆயர்கள் மாமன்றம், ஒரு பார்வை

உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர், ஒருங்கிணைந்த சூழலியல் பாதுகாப்பிற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவோம், அவர்களுக்காகச் செபிப்போம்

மேரி தெரேசா: வத்திக்கான்

தென் அமெரிக்காவிலுள்ள அமேசான் பருவ மழைக்காடுகளின் இயற்கை அமைப்பும், அங்குப் பாய்ந்துசெல்லும் அமேசான் ஆற்றின் நீரோட்ட வனப்பும், அங்கு வாழ்கின்ற பூர்வீக இன மக்களும், உலகில் வேறெங்கிலும் காண இயலாத அரியவகை பல்லுயிர்களும் உலகினர் அனைவரையும் வியப்பின் எல்லைக்கே அழைத்துச் செல்கின்றன. ஆனால் உலகிற்கே உயிர்மூச்சை அளித்துக்கொண்டிருக்கும் இந்தக் காடுகளின் கனிம வளங்கள் மற்றும், மரங்கள், அண்மை ஆண்டுகளாக பன்னாட்டு பண முதலைகளின் பேராசைகளுக்குப் பலியாகி வருகின்றன. சூழலியலும் வெகுவாய்ப் பாதிக்கப்பட்டு வருகின்றது. இதனை எதிர்க்கும் அந்த மண்ணின் பூர்வீக மக்களும், பண முதலைகளின் துப்பாக்கிகளுக்குப் பலியாகி வருகின்றனர். 1970ம் ஆண்டுக்கும், 1980ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், துப்பாக்கிச் சூடுகளால், அக்காடுகளில் வாழ்கின்ற பல பூர்வீக இனங்களில், ஓர் இனம் முழுவதுமே கொல்லப்பட்டுவிட்டதாம். இந்த இனத்தில் ஒருவர் மட்டும் எப்படியே தப்பித்து கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேல் காடுகளில் தனியே வாழ்ந்து வருகிறாராம். இந்நிலையில், அமேசான் காடுகளையும், அம்மண்ணின் மாந்தர்களையும் அழிவிலிருந்து காப்பாற்றுவது மற்றும், அம்மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமேசான் பகுதியை மையப்படுத்தி, ஒரு சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, ஞாயிறு மூவேளை செப உரையில் அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு தயாரிப்புகள் தீவிரமாக நடந்தன. அக்டோபர் 06, இஞ்ஞாயிறன்று அந்த உலக ஆயர்கள் மாமன்றத்தை, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருப்பலி நிறைவேற்றி, அதிகாரப்பூர்வமாகத் துவங்கி வைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். அக்டோபர் 27ம் தேதி வரை வத்திக்கானில் நடைபெறும் இம்மாமன்றத்தில் 184 மாமன்றத் தந்தையர்களும், ஏனைய பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், அமேசான் பகுதி நாடுகளைச் சார்ந்தவர்கள்.

உலக ஆயர்கள் மாமன்றம்

உலக ஆயர்கள் மாமன்றம் என்பது என்ன? இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தில் ஏற்பட்ட கூட்டுப்பண்பு அனுபவ உணர்வில், அப்பொதுச்சங்கத் தந்தையரின் விருப்பத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1965ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி உருவாக்கிய ஒரு நிரந்தர அமைப்பே, உலக ஆயர்கள் மாமன்றமாகும். "Synod" என்ற சொல், Syn அதாவது "ஒன்றாய்", ஒன்றுசேர்ந்து என்றும், hodos அதாவது, பாதை, வழி என்றும் பொருள்படும் இரு கிரேக்கச் சொற்களிலிருந்து உருவானதாகும். அதாவது "synod" என்றால், ஒன்றாய்வருதல், ஒன்றுகூடுதல் என்ற  அர்த்தமாகும். திருஅவையில் "synod" அதாவது மாமன்றம் என்பது, உலகெங்கிலுமிருக்கின்ற ஆயர்கள் திருத்தந்தையுடன் ஒன்றுகூடி, உலகளாவியத் திருஅவையில் மதிக்கத்தகுந்த தலைப்புகள் பற்றிய தகவல்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் பேரவையாகும். இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்திற்கு முன்னரே, இத்தகைய உலக ஆயர்கள் மாமன்ற அமைப்பு பற்றிய எண்ணம் வளர்ந்து வந்துள்ளது. ஐக்கிய அரபு குடியரசாகிய எகிப்திற்கு, திருப்பீட தூதராகப் பணியாற்றிய, கர்தினால் Silvio Oddi அவர்கள், 1959ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி, திருஅவையில் மத்திய நிர்வாக அமைப்பு ஒன்று உருவாக வேண்டுமென பரிந்துரைத்தார். அதற்கு, ஆலோசனை அமைப்பு எனவும் அவர் பெயரிட்டார். திருஅவையில் திருப்பீட தலைமையகத்திலுள்ள பேராயங்கள் மற்றும், அவைகள் தவிர, ஒரு நிரந்தர ஆலோசனை அமைப்பு இல்லை என, உலகின் பல பகுதிகளிலிருந்து புகார்கள் வருகின்றன என்பதையும், கர்தினால் Oddi அவர்கள் குறிப்பிட்டிருந்தார். 1959ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி, நெதர்லாந்து நாட்டின் Utrecht பேராயர் கர்தினால் Alfrink அவர்களும் இதேபோன்று வெளியிட்டிருந்தார்.

மாமன்றம் துவங்கிய முறை

புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், மிலான் பேராயராகப் பணியாற்றிய சமயத்தில், இந்தக் கருத்தியல்களுக்கு அழுத்தம் கொடுத்தார். புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் இறைபதம் எய்தியதை நினைவுகூர்ந்த நிகழ்விலும், இத்தகைய ஓர் உலக ஆயர்கள் மாமன்றம் இன்னும் நடைமுறையில் இல்லையென்பதை அவர் குறிப்பிட்டார். இறுதியில், புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் நிறைவுற்றிருந்த சூட்டோடு, அந்தப் பொதுச்சங்கத்தின் அனுபவத்தால் தூண்டப்பட்டு, அதில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், 1965ம் ஆண்டில், உலக ஆயர்கள் மாமன்றத்தை உருவாக்கினார்.

உலக ஆயர்கள் மாமன்றம்

உலக ஆயர்கள் மாமன்றம், கத்தோலிக்கத் திருஅவையில் 1967ம் ஆண்டு முதல் ஏறத்தாழ இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது. இது, திருஅவையின் வாழ்வில், ஒரு சிறப்பான மற்றும், தனித்துவமிக்க நிகழ்வாகும். உலகளாவிய திருஅவையின் நன்மைக்கு, உரோம் ஆயரான திருத்தந்தைக்கு ஆலோசனைகள் மற்றும், பரிந்துரைகள் வழங்குவதற்காக, உலகெங்கிலுமிருந்து ஆயர்கள் ஒன்று கூடும் நிகழ்வாகும். ஒவ்வொரு மாமன்றத்திற்கும் திருத்தந்தை தேர்ந்தெடுக்கும் தலைப்பை மையப்படுத்தி ஒரு குறிப்பிட்ட பாதையில் ஒன்றுசேர்ந்து பயணிப்பதாகும். ஒவ்வொரு மாமன்றத்தின் இறுதியிலும், திருஅவை தன் வாழ்வில் தாங்கிச் செல்லவேண்டிய சூழல்கள் மற்றும், காரியங்களையும், இக்கால உலகில் திருஅவை செயல்படுத்த வேண்டிய செயல்களையும் பொருத்தவரை, திருத்தந்தை தன் சகோதரர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்துவார். (புனித திருத்தந்தை 6ம் பவுல்).

ஆயர்கள் மாமன்றத்தின் பணி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், உலக ஆயர்கள் மாமன்றம், இறைமக்களின் தேவைகளை நிறைவேற்றவும், திருஅவைகள் மத்தியில் குழும ஒன்றிப்பை ஊக்கப்படுத்தவுமான ஓர் அமைப்பாகும். ஒரு குறிப்பிட்ட தலைப்பு பற்றி, தலத்திருஅவைகளிடமிருந்து தகவல்களைச் சேகரிக்கும் அமைப்பாகும். அந்த மாமன்றம், உரோமன் கத்தோலிக்கத் திருத்தந்தைக்கு ஆலோசனைகள் வழங்குகின்றது. எனவே, இந்த மாமன்றம், இறைமக்கள் அனைவருக்கும் குரல்கொடுக்கும் தகுதியுடைய அமைப்பாகும்.

Ordo Synodi Episcoporum

புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1965ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி, Apostolica Sollecitudo என்ற, தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும் திருத்தூது மடல் வழியாக இதனை உருவாக்கினார். இந்த மாமன்றம், ஏனைய உலக நிறுவனங்கள் போன்று, காலப்போக்கில் மெருகூட்டப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவர், 1966ம் ஆண்டில் முதலில் வெளியிட்ட, Ordo Synodi Episcoporum என்ற அறிக்கையில், மாமன்றம் பற்றிய அனைத்து விதிமுறைகளையும் கொடுத்திருந்தார். தலைப்புகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், இந்த ஆயர்கள் மாமன்றம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும், அதன் அமர்வுகளுக்குத் தலைமை தாங்குபவர்கள் யார், இதில் பங்கெடுப்பவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், தகவலகள் எவ்வாறு சேகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும், மாமன்றத்தில் ஆயர்கள் எந்த திருஅவை சார்ந்த ஆடைகளை அணிந்திருக்க வேண்டும் போன்ற அனைத்து விதிமுறைகளும் வழங்கப்பட்டிருந்தன. இந்த ஏட்டைத் தொடர்ந்து, புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1969 மற்றும், 1971ம் ஆண்டுகளிலும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் 2006ம் ஆண்டிலும் மாமன்ற விதிமுறைகள் கொண்ட ஏடுகளை வெளியிட்டனர்.

1983ம் ஆண்டில் வெளியிடப்பட்ட திருஅவை சட்டத்தின் புதிய விதிமுறைகள் ஏட்டில், முதன்முறையாக, உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு ஒரு பிரிவு ஒதுக்கப்பட்டது. அந்தப் பிரிவில் முதல் பகுதி இறைமக்கள் பற்றியும், இரண்டாவது பகுதி, திருஅவையின் அரசியலமைப்பு பற்றியும் விவரிக்கிறது.

ஆயர்கள் மாமன்றம் இறைமக்கள் பணியில்

இளையோர், விசுவாசம் மற்றும், அழைப்பை தெளிந்து தேர்தல் எனும் தலைப்பில், 2018ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி உலக ஆயர்கள் மாமன்றம் துவங்குவதற்கு சில நாள்களுக்குமுன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Episcopalis communio என்ற, திருத்தூது கொள்கை விளக்கத்தை வெளியிட்டார். அதில், உலக ஆயர்கள் மாமன்றத்தின் நோக்கம் மற்றும் அதன் பல்வேறு கூறுகள் பற்றி சுட்டிக்காட்டியிருந்தார். அதோடு, ஆலோசனை கேட்டல், மாமன்ற நடைமுறைகளைச் செயல்படுத்தல் ஆகிய இரண்டிலும், இறைமக்கள் அனைவரையும் இணைப்பது உட்பட, மாமன்ற அமைப்பு முறையை மேம்படுத்துவதற்கு சில கூறுகளையும் திருத்தந்தை அதில் கொடுத்திருந்தார். ,   

மூன்று வகை உலக மாமன்றங்கள்

1. உலகளாவிய திருஅவையின் நன்மைக்காக, சில தலைப்புக்கள் பற்றி சிந்திப்பதற்கு சாதாரண உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறுகின்றது. இதுவரை 13  மாமன்றங்கள்  நடைபெற்றுள்ளன. இவற்றில், 2018ம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற இளையோர் பற்றிய மாமான்றமே கடைசியானதாகும்.

2. அசாதாரண உலக ஆயர்கள் மாமன்றம். உலகளாவிய திருஅவையின் நன்மைக்காக உடனடியாகத் தீர்வுகள் காணப்படுவதற்கு கூட்டப்படுவதாகும். இதுவரை மூன்று அசாதாரண ஆயர்கள் மாமன்றங்கள் நடைபெற்றுள்ளன. 2014ம் ஆண்டில் குடும்பம் பற்றிய நடைபெற்றதே கடைசியானது.

3. சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட புவியில் பகுதியை மையப்படுத்தி நடைபெறுவதாகும். இதுவரை பத்து சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றங்கள் நடைபெற்றுள்ளன. அமேசான் பற்றி இஞ்ஞாயிறன்று துவங்கியுள்ள உலக ஆயர்கள் மாமன்றம் இந்த வகையைச் சார்ந்தது.

பொதுவாக மாமன்றங்கள் முடிந்தபின்னர், திருத்தந்தையர் திருத்தூது அறிவுரை மடல்களை வெளியிடுகின்றனர்.

அமேசான் பற்றிய, சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமேசான் பற்றிய, சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தை, அக்டோபர் 06, இஞ்ஞாயிறன்று திருப்பலியில் நிறைவேற்றி துவங்கி வைத்தார். அதில் ஆற்றிய மறையுரையில், அமேசான் மழைக் காடுகளில் அண்மையில் ஏற்பட்ட தீ பற்றிக் குறிப்பிட்டார். கடவுளின் நெருப்பு, ஆதாயங்களால் அல்ல, மாறாக, பகிர்வால் ஊட்டம் பெறுகிறது. எல்லாரையும், எல்லாவற்றையும் ஒரேமாதிரியாக அமைப்பதற்கு முயற்சிக்கையில், மக்கள் தங்களின் சொந்த எண்ணங்களை மட்டுமே ஊக்குவிக்க விரும்புகையில், அழிக்கின்ற நெருப்பு கொளுந்துவிட்டு எரிகிறது. அது கடவுளின் நெருப்பு அல்ல, ஆனால் அது, உலகின் நெருப்பு. புதிய வடிவ காலனி ஆதிக்கத்தின் பேராசையிலிருந்து கடவுள் நம்மைப் பாதுகாப்பாராக, மக்களும், கலாச்சாரங்களும், அன்பின்றியும், மதிக்கப்படாமலும் பேரழிவுக்கு உள்ளாகின்றனர். அமேசானில் வாழ்கின்ற நம் சகோதரர், சகோதரிகள், பளுவான சிலுவைகளைச் சுமக்கின்றனர். நற்செய்தியின் விடுதலையளிக்கும் ஆறுதலுக்காகவும், திருஅவையின் அன்புநிறைந்த பராமரிப்புக்காகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர். அமேசானில் இப்போது தங்கள் வாழ்வை இழப்பவர்கள், ஏற்கனவே இழந்தவர்கள் ஆகியோருடன் இணைந்து நம் பயணத்தைத் தொடர்வோம். இவ்வாறு மறையுரையில், கூறியத் திருத்தந்தை, இந்த உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர், ஒருங்கிணைந்த சூழலியல் பாதுகாப்பிற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவோம், அவர்களுக்காக கடவுளிடம் மன்றாடுவோம் என்றார்.

இறைவனின் படைப்புப் பாதுகாக்கப்பட, உலகினர் எல்லாரும் நலமுடன் வாழ, அடுத்த தலைமுறை வாழ்வதற்கேற்ற ஓர் உலகை விட்டுச் செல்ல நாமும் முயற்சிப்போம்.

07 October 2019, 15:40