தேடுதல்

Vatican News
OSCEயின் சிறப்பு கண்காணிப்பு குழுவினர் OSCEயின் சிறப்பு கண்காணிப்பு குழுவினர்  

உலக வளம் சுரண்டப்படுதல் – திருப்பீடத்தின் கவலை

ஒரு காலத்தில் இறைவனின் கொடைகளை வழங்கும் ஆதாரமாக கண்ணோக்கப்பட்ட பூமிக்கோளம், தற்போது விருப்பம்போல் சுரண்டப்பட்டு வருகிறது - பேரருள்திரு Grech

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பொருளாதார, மற்றும் சுற்றுச்சூழல் கண்ணோட்டம் குறித்து, OSCE எனும் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்தில், திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றினார், பேரருள்திரு Joseph Grech.

19ம் நூற்றாண்டின் நவீனத் தொழில்மயமாக்கலின் விளைவாக, இவ்வுலகிற்கும், மனிதகுலத்திற்கும் இடையே விளங்கும்  ,ஆபத்தானச் சூழல்களைச் சந்தித்து வருகிறது என்று கூறிய பேரருள்திரு Grech அவர்கள், ஒரு காலத்தில் இறைவனின் கொடைகளை வழங்கும் ஆதாரமாக கண்ணோக்கப்பட்ட பூமிக்கோளம், தற்போது விருப்பம்போல் சுரண்டப்பட்டு வருகிறது என்ற கவலையையும் தெரிவித்தார்.

இவ்வுலகின் வளங்கள் குறைந்து வருவதை, நீர் மேலாண்மைத் துறையில் நாம் ஏற்கனவே கண்டு வருகிறோம் என்றுரைத்த பேரருள்திரு Grech அவர்கள், தேவைகளின் அதிகரிப்பு, தட்பவெட்ப நிலை மாற்றம், போதிய நல ஆதரவின்மை, மாசுக்கேடு, கழிவு மேலாண்மை போன்றவை பல இலட்சக்கணக்கான மக்களின், குறிப்பாக, ஏழைகளின் வாழ்வைப் பாதித்து வருகின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொருவருக்கும் குடிநீர் மற்றும் நல ஆதரவுப் பணிகள் வழங்கப்படவேண்டியதன் அவசியத்தையும், பேரருள்திரு Grech அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

14 October 2019, 15:43