தேடுதல்

Vatican News
இளம் பெண்கள் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுதல் - கோப்புப் படம் இளம் பெண்கள் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுதல் - கோப்புப் படம்  (AFP or licensors)

தீபாவளித் திருவிழாவுக்காக திருப்பீடத்தின் சிறப்புச் செய்தி

ஒளியின் திருவிழா, இந்து நண்பர்கள் அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்வு, அமைதி, செழிப்பு ஆகியவற்றைக் கொணரவேண்டும் – கர்தினால் Guixot

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 27, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படவிருக்கும் தீபாவளித் திருவிழாவுக்கென, திருப்பீடத்தின் பல்சமய உரையாடல் அவை சிறப்புச் செய்தியொன்றை, இத்திங்களன்று வெளியிட்டுள்ளது.

பல்சமய உரையாடல் அவையின் தலைவர், கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்களும், இந்த அவையின் செயலர், அருள்பணி Indunil Janakaratne Kankanamalage அவர்களும் இணைந்து, அனுப்பியுள்ள இச்செய்தி, 'மத நம்பிக்கையாளர்கள்: உடன்பிறந்த நிலையையும், அமைதிநிறைந்த வாழ்வையும் கட்டியெழுப்புவோர்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

மகிழ்வையும், அமைதியையும் கொணரும் ஒளியின் திருவிழா

ஒளியின் திருவிழா, இந்து நண்பர்கள் அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்வு, அமைதி, செழிப்பு ஆகியவற்றைக் கொணரவேண்டும் என்ற வாழ்த்துரையோடு இச்செய்தி ஆரம்பமாகியுள்ளது.

மதங்களுக்கிடையிலும், கலாச்சாரங்களுக்கிடையிலும் உரையாடல்களும், கூட்டுறவு முயற்சிகளும் வளர்ந்துவரும் இக்காலத்தில், வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றுவோரிடையே, வெறுப்புணர்வும், அக்கறையற்ற மனநிலையும் வளர்ந்து வருகின்றன என்ற கவலை இச்செய்தியில் வெளியிடப்பட்டுள்ளது.

உண்மையான மதங்கள் வலியுறுத்தும் பண்புகள்

ஒவ்வொரு மனிதரின் அடிப்படை மாண்பையும், மனிதர்கள் அனைவரையும் சகோதரர், சகோதரிகளாக காணவேண்டிய பண்பையும் அனைத்து உண்மையான மதங்களும் வலியுறுத்துகின்றன என்று எடுத்துரைக்கும் இச்செய்தி, இந்த அடிப்படையில், அனைத்து மதத்தவரும் அமைதியை உருவாக்க அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறுகிறது.

ஒரு சில எதிர்மறையான செய்திகளே தலைப்புச் செய்திகளாக ஊடகங்களை நிறைத்தாலும், உடன்பிறந்த உணர்வை விதைக்கும் நன்மைத்தனம், மனிதர்கள் மத்தியில் கடலென பெருகியுள்ளது என்ற நம்பிக்கையில், நாம் அமைதியைக் கட்டியெழுப்பவேண்டும் என்று, இச்செய்தி அழைப்பு விடுக்கிறது.

மகாத்மா காந்தியின் எடுத்துக்காட்டு

உண்மை, அன்பு, அகிம்சை ஆகிய உயர்ந்த இலட்சியங்களுக்கு சாட்சியாக வாழ்ந்த மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்தநாள் நினைவு, இந்த அக்டோபர் மாதத்தின் துவக்கத்தில் கொண்டாடப்பட்டது நமக்கு நல்லதொரு நினைவுறுத்தலாக விளங்குகிறது என்று கூறும் இச்செய்தி, காந்தி அவர்களின் வாழ்வு, நம் அனைவருக்கும் உந்துசக்தியாக விளங்கவேண்டும் என்ற வாழ்த்துடன் நிறைவு பெறுகிறது.

21 October 2019, 14:38