தேடுதல்

Vatican News
ஆயர்கள் மாமன்ற பொது அவை கூட்டம் ஆயர்கள் மாமன்ற பொது அவை கூட்டம்  (Vatican Media)

உலக ஆயர் மாமன்றத்தின் இறுதி ஏட்டின் முன்வரைவு

உலக ஆயர் மாமன்றத்தின் 16வது பொது அவைக்கூட்டத்தில் சனிக்கிழமையன்று மாலை, இறுதி ஏடு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

வத்திக்கானில் இடம்பெற்றுவரும், அமேசான் பகுதி குறித்த உலக ஆயர் மாமன்றத்தின் 14வது பொது அமர்வில், இத்திங்களன்று காலை, இறுதி ஏட்டில் இடம்பெற உள்ள பரிந்துரைகளின்  முன்வரைவு சமர்ப்பிக்கப்பட்டது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முன்னிலையில் 184 மாமன்றத் தந்தையர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், பிரேசில் நாட்டின் Sào Paulo முன்னாள் பேராயர், கர்தினால் Claudio Hummes அவர்கள், இதுவரை இம்மாமன்றத்தில் இடம்பெற்ற உரைகளின் தொகுப்பை முன்வைக்க, இது, சிறு சிறு குழுக்களின் ஆய்வுக்கென வழங்கப்பட உள்ளது.

இறுதி ஏட்டிற்கென தயாரிக்கப்பட்டுள்ள இந்த முன்வரைவை விவாதித்து அதில் இக்குழுக்களால் வழங்கப்படும் திருத்தங்கள், சிறப்பு வல்லுனர்களின் உதவியுடன் இறுதி ஏட்டில் இணைக்கப்பட்டு, வெள்ளியன்று 15வது பொது அவையில் வாசிக்கப்படும். சனிக்கிழமையன்று மாலை இடம்பெறும் 16வது பொது அவைக்கூட்டத்தில் இந்த இறுதி ஏடு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

திங்களன்று இடம்பெற்ற 14வது பொது அவையில் மறையுரை வழங்கிய இலத்தின் அமெரிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர், பேராயர் Miguel Cabrejos Vidarte அவர்கள், அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்கள் இயற்கையின் மீது கொண்டிருந்த அன்பு குறித்து எடுத்துரைத்தார்.

21 October 2019, 14:11