தேடுதல்

Vatican News
எருசலேம் எருசலேம் 

போர்ப் பகுதிகளில் வலுவற்ற மக்களுக்கு பாதுகாப்பு அவசியம்

போர்களில், உலகளாவிய மனிதாபிமான சட்டம் கடைப்பிடிக்கப்படாமல் இருப்பது குறித்தும் திருப்பீடம் கவலை கொண்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

போர்கள் இடம்பெறும் இடங்களில் பாதுகாப்பற்ற மக்களுக்கும், மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் புலம்பெயர்ந்தோர் முகாம்கள் போன்ற இடங்களுக்கும் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா. பாதுகாப்பு அவையில் கேட்டுக்கொண்டார்.

நியு யார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், பாலஸ்தீனிய விவகாரம் உட்பட, மத்திய கிழக்குப் பகுதி பற்றிய விவாதத்தில், போர்கள் இடம்பெறும் இடங்களில் பாதிக்கப்படுவோரின் வாழ்வும் மாண்பும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மத்திய கிழக்குப் பகுதியையும், அங்கு வாழ்கின்ற மக்களையும் தொடர்ந்து பாதித்து வரும் கடுமையான போர்கள் குறித்தும், போர்களில், உலகளாவிய மனிதாபிமான சட்டம் கடைப்பிடிக்கப்படாமல் இருப்பது குறித்தும் திருப்பீடம் கவலை கொண்டுள்ளதாகவும், பேராயர் அவுசா அவர்கள் தெரிவித்தார்.

சிரியாவில் எட்டு ஆண்டுகளுக்குமேல் நடைபெற்ற போர் முடிந்தது போல் தெரிந்தவேளை, மீண்டும் சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ள அண்மை நிகழ்வுகள் கவலை தருகின்றன என்றும் கூறிய பேராயர் அவுசா அவர்கள், சரியான தீர்வுகள் காணப்பட, உரையாடல் பாதையில், நேர்மை மற்றும், ஒளிவுமறைவற்ற முயற்சிகள் அவசியம் என்றும் கூறினார்.

பாலஸ்தீனிய விவகாரத்தில் இன்னும் தீர்வு காணப்படாதநிலை உள்ளது என்றும், அம்மக்கள், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளைக் கொண்டு, இஸ்ரேல் நாட்டுடன், பாதுகாப்புடன், அமைதியில் வாழ்வதற்கு வழி செய்யப்படுமாறும் பேராயர் கேட்டுக்கொண்டார்.

இஸ்ரேல்-பாலஸ்தீனிய விவகாரங்களில், புனித பூமியின் புனித இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், எருசலேமின் உலகளாவிய தன்மை உறுதி செய்யப்படவேண்டுமென்றும், பேராயர் அவுசா அவர்கள், ஐ.நா. பாதுகாப்பு அவையில் கூறினார்.

29 October 2019, 15:17