தேடுதல்

அமேசான் மாமன்றம் அமேசான் மாமன்றம் 

அமேசான் மாமன்றம்: சூழலியல் மனமாற்றம் மற்றும், கடவுளின் கனவு

அமேசான் பகுதியின் மறைசாட்சிகளால் ஏற்கனவே வளர்க்கப்பட்ட பாதைகளை, அகிலத் திருஅவை அங்கீகரிப்பதற்கு, இந்த மாமன்றம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமேசான் உலக ஆயர்கள் மாமன்றப் பிரதிநிதிகள், சிறு குழுக்களில் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை, நான்கு பிரதிநிதிகள், இவ்வெள்ளியன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தனர்.

அருள்சகோதரி தனியேலா

இச்செய்தியாளர் கூட்டத்தில் முதலில் பேசிய, கொலம்பிய நாட்டின் பெண் துறவு சபைகள் அமைப்பின் பொதுச் செயலர் அருள்சகோதரி தனியேலா அதிரியானா கன்னாவினா அவர்கள், அமேசான் பகுதியில், அர்ப்பணிக்கப்பட்ட இருபால் துறவியர் தங்களின் அர்ப்பண வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் மற்றும், புதிய மறைபரப்புப் பணியில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

பேராயர் பிசிக்கெல்லா

புதிய வழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிக்கெல்லா அவர்கள் பேசுகையில், திருஅவையின் உலகளாவிய மற்றும், அந்தந்த பகுதியின் தன்மைகள் குறித்து கூறினார்.

எந்தவொரு கலாச்சாரமும், கிறிஸ்தவ எதார்த்தத்தின் வளமையை ஒருபோதும் குறைத்ததில்லை என்றும், அமேசான் கலாச்சாரங்களின் சில கூறுகளை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறிய, பேராயர் பிசிக்கெல்லா அவர்கள், அமேசானுக்கு, ‘அமேசான் வழிபாட்டுமுறை அவசியம்’ என்று தனது குழு பரிந்துரைத்தது என்று தெரிவித்தார்.

ரொய்மா ஆயர் மாரியோ

பிரேசில் நாட்டு ரொய்மா ஆயர் மாரியோ அந்தோனியோ த சில்வா அவர்கள் பேசுகையில், அமேசான் பகுதியின் மறைசாட்சிகளால் ஏற்கனவே வளர்க்கப்பட்ட பாதைகளை அகிலத் திருஅவை அங்கீகரிப்பதற்கு, இந்த மாமன்றம் ஒரு வாய்ப்பாக உள்ளது என்றும், கிறிஸ்தவ சமுதாயங்கள், தங்களின் பிரச்சனைகளுடன் அழுகுரல் எழுப்புகின்றன என்றும் கூறினார்.  

கடவுளின் கனவு

அமேசான் திருஅவை அமைப்பின் செயலர் மவ்ரிசியோ லோப்பெஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இஞ்ஞாசியார் ஆன்மீகத்தைக் குறிப்பிட்டு, நம் எதார்த்த நிலைகளில் கடவுளின் கனவு என்ன என்பதை, நாம் நம்மையே கேள்வி கேட்க வேண்டும் என்று கூறினார்.

மக்களின் முக்கியத்துவம், அவர்களின் வருங்காலம் மற்றும், அவர்களின் நம்பிக்கைகள் குறித்து நோக்குவதற்கு நாம் அஞ்சக் கூடாது என்றும், உலகின் வளங்களில் 90 விழுக்காட்டை சிறு குழுவினர் கொண்டிருக்கின்றனர் என்றும் உரைத்த லோப்பெஸ் அவர்கள், உரிமைகள் மீறப்படல், நிலங்கள் கவரப்படல், பொதுவான இல்லத்தை அழித்தல் போன்ற சமத்துவமின்மையின் அமைப்புமுறை பாவம் பற்றியும் சுட்டிக்காட்டினார்.

அருள்பணி கோஸ்தா சே.ச.

இம்மாமன்ற சமூகத்தொடர்பு அவையின் செயலர் இயேசு சபை அருள்பணி ஜாக்கோமோ கோஸ்தா அவர்கள் பேசுகையில், சிறு குழுக்களில் இடம்பெறும் விவாதங்களிலிருந்து வெளிவரும் கருத்துக்கள், மாமன்றத்தின் கூறுகளைக் குறிக்காது என்று தெளிவுபடுத்தினார்.

இம்மாமன்றம், பிரதிநிதிகள் ஒவ்வொருவரின் கருத்துக்களைக் கேட்டுவரும்வேளை, இந்தக் கட்டத்தில் அவர்கள், தங்களின் தனிப்பட்ட எண்ணங்களையும், கணிப்புக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்றும், அருள்பணி கோஸ்தா அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2019, 14:56