தேடுதல்

Vatican News
அமேசான் உலக ஆயர்கள் மாமன்றம் குறித்து அக்டோபர் 16 நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டம் அமேசான் உலக ஆயர்கள் மாமன்றம் குறித்து அக்டோபர் 16 நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டம் 

ஆன்மீக உணர்வுகளோடு நடைபெறும் அமேசான் மாமன்றம்

அமேசான் மாமன்ற அமர்வுகளில், கலாச்சாரங்களின் சந்திப்பு, அருளடையாளங்களை அடையும் வழிகள், மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளுதல் போன்ற விடயங்களில் கருத்துப் பரிமாற்றங்கள், இடம்பெற்றுவருகின்றன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம் பொதுவான இல்லமான பூமியைக் காப்பதற்கு நாம் சூழலியல் மனமாற்றம் பெறவேண்டும் என்ற அழைப்பை வலியுறுத்த, அமேசான் நிலப்பகுதி உதவியாக உள்ளது என்று, திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் தலைவர் - முனைவர் பவுலோ ருஃபீனி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

மாமன்ற அமர்வுகளில் இதுவரை...

அமேசான் உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்வோர், அக்டோபர் 16, இப்புதனன்று, குழுக்களில் விவாதங்கள் மேற்கொண்டதையடுத்து, இப்புதனன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், இதுவரை, இம்மாமன்ற அமர்வுகளில் நடைபெற்றுள்ள கருத்துப் பரிமாற்றங்களை ருஃபீனி அவர்கள் தொகுத்து வழங்கிய வேளையில் இவ்வாறு கூறினார்.

கலாச்சாரங்களின் சந்திப்பு, அருளடையாளங்களை அடையும் வழிகள், கல்வி மற்றும் ஏனைய அருள்பணி முயற்சிகள், மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளுதல் போன்ற பல்வேறு விடயங்களில் ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள், மாமன்ற அமர்வுகளில் இடம்பெற்றுவருவதாக ருஃபீனி அவர்கள் தெரிவித்தார்.

மாமன்றம், பாராளுமன்றமல்ல

இந்த மாமன்ற அமர்வுகளில் நிகழும் கருத்துப் பரிமாற்றங்கள், பாராளுமன்றங்களில் நடைபெறும் அரசியல் வாக்குவாதங்களைப் போல் நிகழாமல், ஆன்மீக உணர்வுகளோடும், உடன்பிறந்த தோழமையோடும் நிகழ்கின்றன என்று இயேசு சபை அருள்பணி ஜியாக்கமோ கோஸ்தா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

"காடுகளின் காவலர்கள்"

அமேசான் பகுதி பழங்குடி மக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள "காடுகளின் காவலர்கள்" என்ற அமைப்பின் உறுப்பினராகிய Yesica Patiachi Tayori என்ற பெண்மணி, தங்கள் இனத்தின் அழிவைத் தடுப்பதற்கு தாங்கள் ஒவ்வொரு நாளும் மேற்கொண்டு வரும் போராட்டங்களைக் குறித்து செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார்.

புனிதத்தில் வளர, இறைவனின் அழைப்பு

இறையழைத்தலுக்கு செவிமடுப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவது, அமேசான் பகுதியில் மட்டுமல்ல, மாறாக, உலகெங்கும் நிகழ்ந்துவருகிறது என்பதை சுட்டிக்காட்டிய பிரேசில் நாட்டு ஆயர் Pedro José Conti அவர்கள், இறைவனின் அழைப்பு, திருமணமாகா நிலை என்ற கண்ணோட்டத்தில் மட்டும் நோக்காமல், அதை, புனிதத்தில் வளர வழங்கப்பட்டுள்ள அழைப்பாக காணவேண்டும் என்ற விண்ணப்பத்தை வெளியிட்டார்.

அமேசான் பகுதியைக் காப்பதற்கு பழங்குடியினரின் இளைய தலைமுறையினரும், குழந்தைகளும் முன்வருவர் என்று தான் நம்புவதாக, ஆயர் Conti அவர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார்.

17 October 2019, 14:43