தேடுதல்

Vatican News
அமேசான் சிறப்பு மாமன்றத்தின் இறுதி செய்தியாளர்கள் கூட்டம் அமேசான் சிறப்பு மாமன்றத்தின் இறுதி செய்தியாளர்கள் கூட்டம் 

அமேசான் சிறப்பு மாமன்றத்தின் இறுதி செய்தியாளர்கள் கூட்டம்

மனமாற்றம் நான்கு வழிகளில் வெளிப்படவேண்டும் மேய்ப்புப்பணியைச் சார்ந்த, கலாச்சாரத்தைச் சார்ந்த, சுற்றுச்சூழலைச் சார்ந்த மற்றும் மாமன்றத்தைச் சார்ந்த மனமாற்றங்கள் - கர்தினால் செர்னி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமேசான் பகுதியை மையப்படுத்தி நடைபெற்ற ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் இறுதி ஏட்டைக் குறித்து, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் நேரடிச் செயலர், கர்தினால் மைக்கில் செர்னி அவர்களும், பெரு நாட்டின் Puerto Maldonadoவின் அப்போஸ்தலிக்க பிரதிநிதி, ஆயர் David Martìnez De Aguirre Guinea அவர்களும், அக்டோபர் 26, இச்சனிக்கிழமை மாலை, செய்தியாளர்கள் கூட்டத்தில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

கர்தினால் மைக்கில் செர்னி

மாமன்ற நாள்களில், மிகுந்த அக்கறையுடனும், ஆர்வத்துடனும் உழைத்த செய்தியாளர்கள் அனைவருக்கும் திருத்தந்தை தன் நன்றியை தெரிவித்துள்ளார் என்று தன் பகிர்வின் துவக்கத்தில் கூறிய கர்தினால் செர்னி அவர்கள், மாமன்றத்தின் இறுதி எடு, 'மனமாற்றம்' என்பதை தன் கருவாகக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

“திருஅவைக்கும், ஒருங்கிணைந்த சூழலியலுக்கும் புதிய பாதைகள்” என்ற மையக்கருத்தை இந்த சிறப்பு மாமன்றம் கொண்டிருந்தது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் செர்னி அவர்கள், மனமாற்றம் இன்றி, புதிய பாதையில் பயணிப்பது கடினம் என்பதையும் எடுத்துரைத்தார்.

அமேசான் எரிந்துகொண்டிருந்ததை இவ்வுலகம் கண்ணுற்றபோது, மாற்றங்கள் தேவை என்பதை உணர்ந்தது என்பதை வலியுறுத்திக் கூறிய கர்தினால் செர்னி அவர்கள், இந்த மாற்றம் மனமாற்றத்தில் ஆரம்பமாகவேண்டும் வேண்டும் என்பதை மாமன்ற தந்தையர் இறுதி ஏட்டில் பதிவு செய்துள்ளனர் என்று கூறினார்.

நான்கு வகை மனமாற்றங்கள்

மனமாற்றம் நான்கு வழிகளில் வெளிப்படவேண்டும் என்பதை செய்தியாளர்கள் கூட்டத்தில் தெளிவுபடுத்திய கர்தினால் செர்னி அவர்கள், மேய்ப்புப்பணியைச் சார்ந்த, கலாச்சாரத்தைச் சார்ந்த, சுற்றுச்சூழலைச் சார்ந்த மற்றும் மாமன்றத்தைச் சார்ந்த மனமாற்றங்கள் குறித்து விளக்கிக் கூறினார்.

ஆயர் David Martìnez De Aguirre Guinea

கலாச்சார மயமாதல், மற்றும் அமேசான் பகுதி கலாச்சாரங்களை திருஅவையுடன் ஒருங்கிணைப்பது ஆகியவை மாமன்றப் பகிர்வுகளில் இடம்பெற்ற முக்கிய கருத்துக்கள் என்று, ஆயர் Aguirre Guinea அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

மாமன்ற நாள்களில், பழங்குடியின மக்களின் பிரதிநிதிகள், மாமன்றத் தந்தையரோடும், திருத்தந்தையோடும் மனம் திறந்து மேற்கொண்ட பகிர்வுகள், நம்பிக்கையூட்டுவனவாக அமைந்தன என்று ஆயர் Aguirre Guinea அவர்கள் எடுத்துரைத்தார்.

திருஅவையில் பெண்களின் பங்கு

திருஅவையில் பெண்கள் வகிக்கக்கூடிய பங்கு என்பதைக் குறித்து கேள்விகள் எழுந்தபோது, பெண்களின் பங்களிப்பை வெறும் செயல்பாடுகள் என்ற அளவில் மட்டும் காண்பது சரியல்ல, மாறாக, அவர்களின் பங்களிப்பு இன்னும் உயர்ந்த நிலையில் இருக்கவேண்டும் என்பது மாமன்றத்தில் வெளியான ஒரு கருத்து என்று பதில் வழங்கப்பட்டது.

பெண்களை தியாக்கோன்களாக உருவாக்குவது குறித்து கேள்வி எழுந்தபோது, அந்தக் கேள்விக்கு பதில் வழங்க இந்த மாமன்றம் சரியான தளம் அல்ல என்றும், அந்தக் கேள்வியை, திருஅவையின் ஏனைய அமைப்புக்கள் சந்திக்கவேண்டும் என்றும் கர்தினால் செர்னி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

28 October 2019, 14:12