தேடுதல்

Vatican News
அமேசானை மையப்படுத்திய ஆயர்கள் சிறப்பு மாமன்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அமேசானை மையப்படுத்திய ஆயர்கள் சிறப்பு மாமன்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் 

அமேசான் பிரச்சனைகள், பல நாடுகளின் பிரச்சனைகள்

கத்தோலிக்கத் திருஅவையின் வளர்ச்சியில் பெண்கள் மிக முக்கியப் பங்கு வகித்தாலும், முடிவுகள் எடுக்கும் நிலையில் பெண்களின் பங்கு மிகக் குறைவாகவே உள்ளது - பொலிவியா ஆயர் Ricardo Guzmán

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமேசானை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெற்றுவரும் ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தைக் குறித்து அக்டோபர் 23, இப்புதன் மாலையில் நடத்தப்பட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில், பெண்களின் பங்கு, கலாச்சாரமயமாதல், மாமன்ற வழிமுறைகள் ஆகிய கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ்

இந்திய ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள், செய்தியாளர்களிடம் பேசுகையில், அமேசான் பகுதியில் காணப்படும் பிரச்சனைகள், இந்தியா உட்பட பல நாடுகள் சந்திக்கும் பிரச்சனைகள் என்று எடுத்துரைத்தார்.

அமேசான் பகுதியில் பணியாற்றும் ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் துறவியர், பழங்குடி மக்களின் பிரச்சனைகளில் முழுமையாக ஈடுபட்டு செயலாற்றுவது, தன்னை பெரிதும் கவர்ந்தது என்று, கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

பொலிவியா ஆயர் Centellas Guzmán

கத்தோலிக்கத் திருஅவையின் வளர்ச்சியில் பெண்கள் மிக முக்கியப் பங்கு வகித்தாலும், முடிவுகள் எடுக்கும் நிலையில் பெண்களின் பங்கு மிகக் குறைவாகவே உள்ளது என்று கூறிய பொலிவியா ஆயர் Ricardo Ernesto Centellas Guzmán அவர்கள், இந்தக் குறையைத் தீர்க்க, கத்தோலிக்கத் திருஅவை, உலகெங்கும் முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆயர் Gilberto Alfredo Vizcarra Mori

படைப்பை ஆள்பவர்கள் என்ற கருத்தில் ஆழ்ந்திருக்கும் மேற்கத்திய கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள், பழங்குடி மக்களுடன் வாழும்போது, அவர்கள் படைப்பிற்கு வழங்கும் மதிப்பையும், படைப்புடன் இணைந்து வாழும் வழிமுறைகளையும் கற்றுக்கொள்ள முடியும் என்று பெரு நாட்டின் அப்போஸ்தலிக்க நிர்வாகியான ஆயர் Gilberto Alfredo Vizcarra Mori அவர்கள் எடுத்துரைத்தார்.

திருஅவையில் பெண்களின் பங்கு

திருஅவையில் பெண்களின் பங்கு என்ற கருத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது, பெண்களின் பங்கு என்பதை, வெறும் திருவழிபாட்டுடன் மட்டும் தொடர்புபடுத்திக் காண்பதை விடுத்து, திருஅவையின் பல்வேறு மேய்ப்புப்பணி செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்துவதைக் குறித்து சிந்திப்பது சிறந்தது என்று, பொலிவியா ஆயர் Centellas Guzmán அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

ஒப்புரவு அருளடையாளம் வழங்குதல், திருப்பலி நிறைவேற்றுதல், உறுதிப்பூசுதல் வழங்குதல், போன்ற ஒரு சில திருவழிபாட்டு சடங்குகளில் பெண்கள் தலைமையேற்க இயலாது என்பதைத் தவிர, திருஅவை சட்டங்களோ, இறையியலோ பெண்களின் பங்கு குறித்து வேறு வழிகளில் தடைகள் விதிக்கவில்லை என்பதை, கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தெளிவாக்கினார்.

மாமன்ற கருத்துப்பரிமாற்றங்களின் தொகுப்பு

மாமன்றத்தில் நிகழ்ந்த கருத்துப்பரிமாற்றங்களின் தொகுப்பை அதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழு உருவாக்கி வருகிறது என்றும், இந்தத் தொகுப்பு, மாமன்றத் தந்தையரின் ஒப்புதலைப் பெற்றபின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் தலைவர், முனைவர் பவுலோ ருஃபீனி, அவர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார்.

24 October 2019, 14:53