தேடுதல்

Vatican News
அமேசானை மையப்படுத்திய ஆயர்கள் சிறப்பு மாமன்றம் ஏற்படுத்திவரும் நல்தாக்கங்கள் பற்றி செய்தியாளர்கள் கூட்டத்தில் பகிர்வு அமேசானை மையப்படுத்திய ஆயர்கள் சிறப்பு மாமன்றம் ஏற்படுத்திவரும் நல்தாக்கங்கள் பற்றி செய்தியாளர்கள் கூட்டத்தில் பகிர்வு 

அமேசான் மாமன்றம்: பூர்வீக இனத்தவரின் ஆன்மீகம்

பூர்வீக இன மக்களின் கலாச்சாரத்திலிருந்து கடவுளையும், வாழ்வையும் பிரிக்க முடியாது, அவர்களின் இறையியல், அறிவியல், வாழ்வு ஆகிய அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமேசானை மையப்படுத்திய ஆயர்கள் சிறப்பு மாமன்றம் ஏற்படுத்திவரும் நல்தாக்கங்கள் பற்றி செய்தியாளர்கள் கூட்டத்தில் பகிர்வு

பூர்வீக இன மக்களின் கலாச்சாரத்திலிருந்து கடவுளையும், வாழ்வையும் பிரிக்க முடியாது என்றும், அவர்களின் இறையியல், அறிவியல், வாழ்வு ஆகிய அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும், மெக்சிகோ Zapoteca பூர்வீக இனத்தைச் சார்ந்த, அருள்பணி Eleazar Lòpez Hernández அவர்கள் கூறினார்.

பெரு நாட்டில் Ashaninca பூர்வீக இனத்தைச் சார்ந்த Delio Siticonatzi Camaiteri அவர்கள் செய்தியாளர்களிடம் விளக்குகையில், தான் வாழ்கின்ற பூமியைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக, இம்மாமன்றத்தில் பங்கு கொள்வதாகத் தெரிவித்தார்.

இந்த மாமன்றத்தில் பூர்வீக இனத்தவர், தங்களின் உரிமைகளுக்காகப் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டனர், இவ்வாறு வெளியே பேசினால் அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்று கூறிய Camaiteri அவர்கள், இந்த மாமன்ற அனுபவம், பூர்வீக இன மக்களுக்கு, நம்பிக்கையின் ஊற்றாக உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், குருக்கள் பேராயத் தலைவரான கர்தினால் Beniamino Stella அவர்களிடம், அமேசான் வழிபாட்டுமுறை பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், தங்களின் தாய் மொழி, அடையாளங்கள், நிறங்கள் மற்றும், கதைகள் வழியாக, மக்கள் தங்களை வெளிப்படுத்த விரும்புவது இயல்புதான் என்று கூறினார்.

இலத்தீன் அமெரிக்கா, தங்களின் மரபுகளின்படி விசுவாசத்தை அறிவிக்கவேண்டியது இன்றியமையாதது என்றுரைத்த அருள்பணி Eleazar Lòpez Hernández அவர்கள், அமேசான் மக்களின் ஆன்மீக அனுபவம், அவர்கள் வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்கின்றது என்று கூறினார்.

ஒரேயொரு கலாச்சாரம், அல்லது ஒரேயொரு பாதையில் மட்டும் கவனம் செலுத்த முடியாது என்றும், எங்களுக்கென தனிப்பட்ட ஆன்மீகம் உள்ளது, ஏற்கனவே எங்களின் வழிபாட்டுமுறையில் வழிபாடுகளை நடத்தி வருகின்றோம், எங்களின் ஆன்மீகம் மற்றும் இறைவார்த்தையில் மேலும் நாங்கள் ஆழப்பட வேண்டும் என்று, பிரேசில் நாட்டு Barassana இனத்தைச் சார்ந்த அருள்சகோதரி Mariluce dos Santos Mesquita அவர்கள் கூறினார்.

25 October 2019, 15:50