தேடுதல்

Vatican News
பாலியல் முறைகேடுகளுக்கு எதிராக பாலியல் முறைகேடுகளுக்கு எதிராக  (AFP or licensors)

சகிப்பற்றதன்மையும், பாகுபாடுகளும் களையப்பட..

கிறிஸ்தவர்கள், தாங்கள் வாழ்கின்ற நாடுகளில் பொதுநலனுக்கும், அமைதியான சமுதாய வாழ்வுக்குமே பணியாற்றி வருகின்றனர், ஆயினும், இவர்கள், பொதுவான தளங்களில் தங்களின் மத நம்பிக்கையுடன் வாழ்வதற்குத் தடைவிதிக்கப்படுகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், மற்றும், ஏனைய மதங்களின் உறுப்பினர்கள் உட்பட, இவ்வுலகினர் எதிர்கொள்ளும் சகிப்பற்றதன்மையும், பாகுபாடுகளும் களையப்படுவதற்கு, முயற்சிகளை ஊக்குவிக்கும் அறிக்கை வெளியிடப்படும் என, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இனப்பாகுபாடு, அந்நியர் மீது வெறுப்பு, யூதமத விரோதப் போக்கு, சகிப்பற்றதன்மை, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், மற்றும், ஏனைய மதத்தவர்க்கெதிரான பாகுபாடு போன்றவற்றை அகற்றுவதற்கென, OSCE எனப்படும், ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும், ஒத்துழைப்பு அவையின் அமைச்சர்கள் போலந்து நாட்டின் வார்சா நகரில் நடத்திவரும் கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார், ஆயர் Joseph Grech.

வியன்னாவிலுள்ள பன்னாட்டு அமைப்புகளுக்கு, திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் ஆயர் Joseph Grech அவர்கள், வார்சாவில், செப்டம்பர் 16ம் தேதி தொடங்கிய இக்கூட்டத்தில், செப்டம்பர் 24, இச்செவ்வாயன்று திருப்பீடத்தின் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரையைச் சமர்ப்பித்தார்.

கிறிஸ்தவர்கள், மற்றும், ஏனைய மதங்களின் உறுப்பினர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் உட்பட, சகிப்பற்றதன்மை மற்றும், பாகுபாட்டுச் செயல்கள், OSCE அமைப்பைச் சேர்ந்த நாடுகளிலும் இடம்பெறுகின்றன என்று கூறினார், ஆயர் Grech.

கிறிஸ்தவர்கள், தாங்கள் வாழ்கின்ற நாடுகளில் பொதுநலனுக்கும், அமைதியான சமுதாய வாழ்வுக்குமே பணியாற்றி வருகின்றனர், ஆயினும், இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் சில நாடுகளின் சட்டங்கள், இந்த அமைப்பின் அர்ப்பணங்களுக்குப் பொருந்துவதாக இல்லை எனவும் ஆயர் Grech அவர்கள் குறிப்பிட்டார்.

கிறிஸ்தவர்கள், பொதுவான தளங்களில் தங்களின் மத நம்பிக்கையுடன் வாழ்வதற்குத் தடைவிதிக்கப்படுகின்றனர் எனவும், இத்தகைய போக்கு வளர்ந்து வருவதால், தனிநபர்கள், தங்கள் மனச்சான்றின்படி வாழவும், செயல்படவும் தடைசெய்யப்படுகிறார்கள் எனவும், ஆயர் Grech அவர்கள், OSCE கூட்டத்தில் கவலை தெரிவித்தார்.

OSCE அவையின் இக்கூட்டம், செப்டம்பர் 27 வருகிற வெள்ளியன்று நிறைவடையும்.

25 September 2019, 16:41