தேடுதல்

Vatican News
வெனெசுவேலாவில் நெருக்கடிநிலை வெனெசுவேலாவில் நெருக்கடிநிலை   (ANSA)

OSCE, மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளைத் தடைசெய்ய...

சித்ரவதையைத் தடைசெய்வதற்கும், ஒழிப்பதற்கும், கல்வியும் பயிற்சியும் மிகவும் அவசியம். திருஅவை, வாழ்வு கலாச்சாரத்தை எப்போதும் உறுதியுடன் ஊக்குவித்து வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வார்சா நகரில் நடைபெற்றுவரும் OSCE அவையின் அமைச்சர்கள் கூட்டத்தில், சித்ரவதை மற்றும், மரண தண்டனையை இரத்து செய்தல் பற்றி நடைபெற்ற அமர்வில், செப்டம்பர் 23, இத்திங்களன்று உரையாற்றிய ஆயர் Joseph Grech அவர்கள், மனித உரிமைகள் மற்றும், மனித மாண்பை, அதிக வெளிப்படையாகவும், மிகக் கடுமையாகவும் மீறும் முறைகளில், சித்ரவதையும் ஒன்றாகும் என்று கூறினார்.

சித்ரவதையும், மனிதாபிமானமற்ற அல்லது, மனிதத்தைக் கீழ்மைப்படுத்தும் நடைமுறைகள் அல்லது தண்டனைகள் உட்பட அனைத்துவிதமான கொடூரங்களும் எல்லாக் காலத்திலும், எல்லா இடங்களிலும் தடைசெய்யப்படுகின்றன என்று, 2005ம் ஆண்டில் OSCE அவை, தீர்மானம் நிறைவேற்றியதைச் சுட்டிக்காட்டினார், ஆயர் Grech.

திருப்பீடமும், இத்தகைய மனிதமற்ற நடவடிக்கைகளைத் தடைசெய்கின்றது, அதேபோல், ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும், ஒத்துழைப்பு அவையின் 57 நாடுகளும் செயல்பட வேண்டுமென, திருப்பீடம் விரும்புகின்றது என்றார், ஆயர் Grech.

சித்ரவதையைத் தடைசெய்வதற்கும், ஒழிப்பதற்கும், கல்வியும் பயிற்சியும் மிகவும் அவசியம் என வலியுறுத்திய ஆயர், மரண தண்டனை வழங்குவது குறித்த திருத்தந்தை மற்றும், திருப்பீடத்தின் நிலைப்பாட்டையும் எடுத்துரைத்தார் ஆயர் கிரெக்.

மரண தண்டனை நிறைவேற்றுவது, தன்னிலே நற்செய்திக்கு முரணாணது என்றும், இது, மனித வாழ்வை மனமுவந்து அழிக்கிறது என்றும், மனித வாழ்வு, படைத்தவரின் கண்களுக்கு எப்போதுமே விலையேறப்பெற்றது என்றும் கூறினார், ஆயர் Grech.

திருஅவை, வாழ்வு கலாச்சாரத்தை எப்போதும் உறுதியுடன் ஊக்குவித்து வருகிறது என்றுரைத்த திருப்பீட அதிகாரி ஆயர் Grech அவர்கள், மரண தண்டனையை கத்தோலிக்கத் திருஅவை எப்போதுமே எதிர்க்கின்றது என்றும் தெரிவித்தார்.

25 September 2019, 16:49