தேடுதல்

கர்தினால் பியெத்ரோ பரோலின் கர்தினால் பியெத்ரோ பரோலின்  

அணுப் பரிசோதனைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு

அணுப் பரிசோதனைகள், அணு ஆயுதங்களை அதிகரிக்காமல் இருப்பது, அணு ஆயுதக் களைவு ஆகிய மூன்றுமே ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

அணுப் பரிசோதனை தடை ஒப்பந்தம் உலக அளவில் அமல்படுத்தப்படுவதற்கு, அதில் இன்னும் கையெழுத்திடாத நாடுகள் கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்துவது தேவைப்படுவதால், அந்நாடுகள் அதில் கையெழுத்திடுமாறு, திருப்பீடம் அழைப்பு விடுக்கின்றது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா. பொது அவையில் கூறினார்.

நியு யார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றுவரும், ஐ.நா. பொது அவையின் 74வது அமர்வில்,  அணுப் பரிசோதனை தடை புரிந்துணர்வு ஒப்பந்தம் அமல்படுத்தப்படுவதை ஊக்குவிப்பது குறித்த அமர்வில், செப்டம்பர் 25, இப்புதனன்று உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

அந்நாடுகள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, நடைமுறைப்படுத்துவதன் வழியாக, மெய்யறிவு, துணிச்சலான தலைமைத்துவம், அமைதிக்கும், அனைவரின் பொது நலனுக்கு அர்ப்பணம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பைக் கொண்டுள்ளன எனவும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.

அணுப் பரிசோதனைகள், அணு ஆயுதங்களை அதிகரிக்காமல் இருப்பது, அணு ஆயுதக் களைவு ஆகிய மூன்றுமே ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன என்று குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், அணுப் பரிசோதனைகள், கட்டுப்பாடற்று அணுக்கதிர்வீச்சுப் பொருள்களை நேரிடையாகச் சற்றுச்சூழலில் பரப்புகின்றன எனவும் எச்சரித்தார்.

அணு ஆயுதப் பரவல், அறநெறிப்படி ஏற்றுக்கொள்ள முடியாதது என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டிப் பேசிய கர்தினால் பரோலின் அவர்கள், அணுப் பரிசோதனை தடை ஒப்பந்தத்திற்கு நாடுகள் அர்ப்பணிப்பதற்கு, இருபது ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்க வேண்டியுள்ளது என்றுரைத்து உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2019, 15:40