தேடுதல்

Vatican News
வத்திக்கான் தோட்டம் வத்திக்கான் தோட்டம் 

வத்திக்கானில் மேற்கொள்ளப்பட்டுள்ள பசுமை முயற்சிகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் போலவே, அவருக்கு முன்னதாக தலைமைப் பொறுப்பில் இருந்த, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களும் இயற்கை மீது அக்கறை கொண்டிருந்தனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பூமிக்கோளத்தைக் காப்பதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காட்டிவரும் அக்கறையைத் தொடர்ந்து, வத்திக்கானில், பசுமை முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று, வத்திக்கான் தோட்டங்களின் பொறுப்பாளர், Rafael Ignacio Tornini அவர்கள் இத்தாலியின் ANSA செய்தியிடம் கூறினார்.

குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கு, ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டு, வத்திக்கானில் சேர்க்கப்படும் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுவதாக, Tornini அவர்கள் கூறியுள்ளார்.

சுற்றுச்சூழலை மையப்படுத்தி, 2015ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலை வெளியிட்டதைத் தொடர்ந்து, குப்பைகளை மேலாண்மை செய்யும், 'சுற்றுச்சூழல் மையம்' வத்திக்கானில் உருவாக்கப்பட்டது என்று Tornini அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்த மையத்திற்கு வந்துசேர்ந்த குப்பைகளில், 98 விழுக்காடு குப்பைகள், ஐரோப்பிய விதிமுறைகளுக்கு உட்பட்டு, பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டன என்று Tornini அவர்கள் கூறினார்.

வத்திக்கானுக்கு வருகைதரும் பயணிகள் தூக்கியெறியும் குப்பைகள் வத்திக்கானுக்கு பெரும் சவாலாக உள்ளது என்பதையும், ஞெகிழிப்பொருள்களின் பயன்பாடு உண்மையிலேயே சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து என்பதையும் தன் பேட்டியில் குறிப்பிட்ட Tornini அவர்கள், ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியும் ஞெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை, வத்திக்கான் நிறுவனங்கள் விரைவில் நிறுத்திவிடும் என்று கூறினார்.

17 July 2019, 14:56