தேடுதல்

Vatican News
'Laudato Si' தலைமுறைகள் 'Laudato Si' தலைமுறைகள் 

இளையோரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிக்கு பாராட்டு

இப்பூமியைப் பாதுகாக்கும் முயற்சிகளில், இளைய தலைமுறைகள் இறங்கியுள்ளது, மகிழ்வாகவும், நம்பிக்கையின் அடையாளமாகவும் உள்ளது - கர்தினால் டர்க்சன்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

கடும் சுற்றுச்சூழல் நெருக்கடியை எதிர்நோக்கிவரும் இப்பூமிக்கோளத்தில், காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கு, இளையோர் எடுத்துவரும் முயற்சிகள், நம்பிக்கையின் அடையாளமாக உள்ளன என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், கூறினார்.

இம்மாதம் கென்யா நாட்டில் நடைபெற்ற, ஆப்ரிக்க கத்தோலிக்க இளையோரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் அனுப்பிய செய்தியில், இவ்வாறு இளையோரைப் பாராட்டியுள்ளார்.

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரிப்பதற்கு, உலகின் பல பகுதிகளிலும் உள்ள மக்களை இறைவன் தூண்டி வருகிறார், இந்த பயணத்தில் இளையோரின் பங்கு, குறிப்பிட்டுச் சொல்லும் அளவில் அமைந்துள்ளது என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இப்பூமியைப் பாதுகாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ள, 'Laudato Si' தலைமுறைகள் பற்றி அறியும்போது, அது மகிழ்வாகவும், நம்பிக்கையின் அடையாளமாகவும் தெரிகின்றது என்று கூறியுள்ள, கர்தினால் டர்க்சன் அவர்கள், இப்பூமியைப் பாதுகாக்கும் திருஅவையின் முயற்சிகளுக்கு, இளையோர் அதிகம் உதவி வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், சுவீடன் நாட்டு 15 வயது நிரம்பிய மாணவி Greta Thunberg அவர்கள், காலநிலை மாற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தித் தொடங்கிய போராட்டத்திற்குப் பின்னர், இளையோர் மத்தியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறை அதிகரித்துள்ளது எனவும், கர்தினால் டர்க்சன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.  

ஆப்ரிக்காவில், சுற்றுச்சூழல் மற்றும், நீடித்த நிலையான வளர்ச்சியை மையப்படுத்திய கத்தோலிக்க இளையோர் அமைப்பு துவங்கப்பட்டதன், ஐந்தாம் ஆண்டு நிறைவு, திருத்தந்தையின், இறைவா உமக்கே புகழ் (Laudato Si') திருமடல் வெளியிடப்பட்டதன் நான்காம் ஆண்டு நிறைவு, ஆகிய இவ்விரு நிகழ்வுகளை முன்னிட்டு, கென்யாவில் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. (ICN)

26 July 2019, 14:37