தேடுதல்

Vatican News
பாலஸ்தீனாவின் காசா பகுதி பாலஸ்தீனாவின் காசா பகுதி 

காசா பகுதியில் அதிகரித்துள்ள வன்முறைகள் கவலை தருகிறது

இஸ்ரேல், பாலஸ்தீனா, ஆகிய இரு தரப்பிலும், வன்முறையைத் தூண்டிவிடும் அறிக்கைகள் வெளிவருவதால், இவ்விரு பகுதிகளிலும் வாழும் அப்பாவி பொதுமக்கள், பெரும் துன்பங்களையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றனர் - பேராயர் அவுசா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனித பூமியின் மேற்குக் கரையில் அமைந்துள்ள காசா (Gaza) பகுதியில் அண்மைய நாள்களில் அதிகரித்துள்ள வன்முறைகள் உலக சமுதாயத்திற்கு கவலையைத் தருகிறது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவையில் வழங்கிய உரையில் கூறினார்.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள்,  ஜூலை 23 இச்செவ்வாயன்று, மத்தியக் கிழக்குப் பகுதி, குறிப்பாக, பாலஸ்தீனா நாடு குறித்து, ஐ.நா.வின் பாதுகாப்பு அவையில் நிகழ்ந்த ஒரு கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

இஸ்ரேல், பாலஸ்தீனா பொதுமக்களின் துயரங்கள்

இஸ்ரேல், பாலஸ்தீனா, ஆகிய இரு தரப்பிலும், வன்முறையைத் தூண்டிவிடும் அறிக்கைகள் வெளிவருவதால், இவ்விரு பகுதிகளிலும் வாழும் அப்பாவி பொதுமக்கள், பெரும் துன்பங்களையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றனர் என்று, பேராயர் அவுசா அவர்கள், கவலை வெளியிட்டார்.

UNRWA போன்ற பன்னாட்டு அமைப்புக்கள் வழங்கும் நிதி உதவியால், பாலஸ்தீன புலம்பெயர்ந்தோர் நடுவே, கல்வி, நலவாழ்வு ஆதரவு ஆகியவை வழங்கப்படுவதை சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் அவுசா அவர்கள், இத்தகைய உதவிகள் இல்லாவிடில், அப்பகுதியில், சிறார், மற்றும், இளையோரின் நிலை மிகவும் ஆபத்தான நிலையை அடைந்திருக்கும் என்று எடுத்துரைத்தார்.

சிரியா, ஏமன் பகுதிகளில் சிக்கியிருப்போர்

மத்தியக் கிழக்குப் பகுதியைக் குறித்து பேசும்போது, சிரியாவின் இத்லிப் (Idlib) பகுதியில் சிக்கியிருக்கும் மக்களை நினைவில் கொள்ளவேண்டும் என்று தன் உரையில் குறிப்பிட்ட பேராயர் அவுசா அவர்கள், இம்மக்கள் சார்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிரியா அரசுத்தலைவர் அசாத் அவர்களுக்கு அனுப்பிய மடலையும் குறிப்பிட்டுப் பேசினார்.

மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டில் நிலவும் கொடுமைகளும் உலக சமுதாயத்தின் கவனத்தைப் பெறவேண்டும் என்று விண்ணப்பித்த பேராயர் அவுசா அவர்கள், இப்பகுதியில் உள்ள பல நாடுகளில் மனிதாபிமான அடிப்படையில் அவசர உதவிகள் மக்களுக்குச் சென்றடையவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

24 July 2019, 14:54