தேடுதல்

Vatican News
ஆஸ்திரேலியா பெருங்கடல் பவளப்பாறைகள் ஆஸ்திரேலியா பெருங்கடல் பவளப்பாறைகள்  (AFP or licensors)

கடல்களில் மனிதச் செயல்பாடுகள் நெறிப்படுத்தப்பட..

பெருங்கடல் பரப்பை திட்டமிடுவதிலும், பல்வேறு உயிரினங்களை மதிப்பீடு செய்வதிலும் ISA அமைப்பு ஆற்றிவரும் பணிகளுக்கு பாராட்டு

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில், கடல்சார் சட்ட ஒப்பந்தம் (UNCLOS) அமலுக்கு வந்ததன் 25ம் ஆண்டு நிறைவு நினைவுகூரப்படும் இவ்வேளையில், பெருங்கடல்கள் மற்றும் கடல்களில் இடம்பெறும் மனிதச் செயல்பாடுகள் நெறிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அமர்வு ஒன்றில்  வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில், கடல்சார் சட்ட ஒப்பந்தம் அமலுக்கு வந்ததன் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஐ.நா.வில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இவ்வாறு கூறினார்.

ஜூலை 26, இவ்வெள்ளியன்று முடிவடைந்த இந்த இரண்டு நாள் கூட்டத்தில் உரையாற்றிய, பேராயர் அவுசா அவர்கள், இந்த ஒப்பந்தமும், பன்னாட்டு கடற்பரப்பில் தாதுவளங்கள் சார்ந்த நடவடிக்கைகளை நெறிப்படுத்தி கட்டுப்படுத்துவதற்கென அமைப்பு (ISA) உருவாக்கப்பட்டும், 25 ஆண்டுகள் நிறைவுற்றாலும், நம் பெருங்கடல்களின் நிலை தொடர்ந்து மோசமாகிக்கொண்டே வருகிறது என, அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று குறிப்பிட்டார்.

நம் பெருங்கடல்களுடன் நமக்குள்ள உறவு, பெருங்கடல்களிலிருந்து பெறும் பொருளாதார ஆதாயங்களும், பெருங்கடல்களைப் பாதுகாத்தலும், வர்த்தக இலாபங்களுக்காக இடம்பெறும் மோதல்கள் ஆகியவை பற்றிய சிந்தனைகளையும், ஐ.நா. அவையில் பகிர்ந்துகொண்டார், பேராயர் அவுசா.

இந்தப் பூமிக்கோளமும், அதிலுள்ள பெருங்கடல்களும், நாம் அனுபவிக்கவும், அதேநேரம் நாம் அவற்றின் பாதுகாவலர்களாக இருக்கவும் வழங்கப்பட்டுள்ள கொடைகள் என்றும், இவை, மனித சமுதாயத்தின் பொதுவான பாரம்பரியச் சொத்தின் கோட்பாடாக பொறிக்கப்பட்டுள்ளன என்றும், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள் கூறினார்.

27 July 2019, 16:05