தேடுதல்

Vatican News
பெரு நாட்டு கர்தினால் பேத்ரோ ரிக்கார்தோ பரெத்தோ (வலதுபுறம்) பெரு நாட்டு கர்தினால் பேத்ரோ ரிக்கார்தோ பரெத்தோ (வலதுபுறம்)  (ANSA)

அமேசான் பகுதியில், திருஅவையின் பிரசன்னம் - ஒரு கிரியா ஊக்கி

அமேசான் நிலப்பகுதி, 75 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது; உலகின் உறைந்துபோகாத குடிநீரின் 20 விழுக்காடு, இப்பகுதியில் உள்ளது; உலகக் காடுகளில் 34 விழுக்காடு, இங்கு உள்ளன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமேசான் பகுதியை மையப்படுத்தி, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் சிறப்பு ஆயர்கள் மாமன்றம், உலகில் நீதியை வளர்ப்பதற்கும், மனிதரின் உரிமைகளைக் காப்பதற்கும், நல்லதொரு அடையாளமாக விளங்கும் என்று, பெரு நாட்டில் பணியாற்றும் இயேசு சபை கர்தினால் பேத்ரோ ரிக்கார்தோ பரெத்தோ (Pedro Ricardo Barreto) அவர்கள் கூறியுள்ளார்.

REPAM என்றழைக்கப்படும் அனைத்து அமசோனிய திருஅவை கூட்டமைப்பின் துணைத் தலைவரும், பெரு நாட்டின் ஹுவான்காயோ (Huancayo) உயர் மறைமாவட்டத்தின் பேராயருமான பரெத்தோ அவர்கள், "La Civiltà Cattolica" என்ற இத்தாலிய இதழில், ஜூலை 18, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் இவ்வாறு கூறியுள்ளார்.

மாண்பையும், நம்பிக்கையையும் வழங்கும் மாமன்றம்

இவ்வாண்டு அக்டோபர் 6ம் தேதி முதல் 27ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறும் இந்த சிறப்பு ஆயர்கள் மாமன்றம், அமேசான் பகுதியில் வாழும் அனைத்து மக்களும் மாண்புடன் வாழவும், எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்கவும் வழி வகுக்கும் என்பதை, கர்தினால் பரெத்தோ அவர்களின் கட்டுரை வலியுறுத்துகிறது.

பல்வேறு நாடுகளை உள்ளடக்கிய அமேசான் நிலப்பகுதியில், திருஅவையின் பிரசன்னம், அனைத்து மக்களின் வாழ்வை உயர்த்தும் ஒரு கிரியா ஊக்கியாக விளங்குமே தவிர, திருஅவையின் பிரசன்னம் பல்வேறு நாட்டு அரசுகளுக்கு அச்சுறுத்தலாக அமையாது என்பதை, கர்தினால் பரெத்தோ அவர்கள் தன் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிரினங்களுக்கும் கலாச்சாரங்களுக்கும் கருவூலம்

அமேசான் நிலப்பகுதி, பல்வேறு உயிரினங்களின் சரணாலயம் என்பது மட்டுமல்ல, இப்பகுதி, பல்வேறு பழங்குடியினரின் கலாச்சாரக் கருவூலம் என்பதையும் உணர்ந்து, இவற்றைப் பாதுகாப்பது, இந்த மாமன்றத்திற்கு முன் வைக்கப்பட்டுள்ள முக்கிய சவால் என்று, கர்தினால் பரெத்தோ அவர்கள் கூறியுள்ளார்.

பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈக்குவதோர், கயானா, பெரு, சுரினாம், வெனிசுவேலா மற்றும் பிரெஞ்சு கயானா ஆகிய ஒன்பது நாடுகளை உள்ளடக்கியது, அமேசான் நிலப்பகுதி என்று கர்தினால் பரெத்தோ அவர்கள் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அமேசான் நிலப்பகுதியின் உ.யிர்வளம்

அமேசான் நிலப்பகுதி, 75 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது; உலகின் உறைந்துபோகாத குடிநீரின் 20 விழுக்காடு, இப்பகுதியில் உள்ளது; உலகக் காடுகளில் 34 விழுக்காடு, இங்கு உள்ளன; உலகத் தாவரங்களில் 30 முதல் 40 விழுக்காடு இந்த நிலப்பகுதியில் வளர்கின்றன என்ற பல்வேறு புள்ளி விவரங்களை, தன் கட்டுரையில் வெளியிட்டுள்ளார், கர்தினால் பரெத்தோ.

28 இலட்சம் பழங்குடியினரையும், 3 கொடியே 30 இலட்சம் மக்களையும் வாழவைக்கும் அமேசான் நிலப்பகுதி, உயிர்வாழும் ஒரு கருவூலம் என்றும், வர்த்தக சுரண்டல்களிலிருந்து இக்கருவூலத்தைக் காப்பது, நம் எதிர்காலத் தலைமுறைக்கு நாம் ஆற்றவேண்டிய கடமை என்றும், இக்கட்டுரையின் இறுதியில், பெரு நாட்டு கர்தினால் பேத்ரோ பரெத்தோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

18 July 2019, 15:05