தேடுதல்

Vatican News
புனித பூமியில் திருத்தந்தை ஆறாம் பவுல் புனித பூமியில் திருத்தந்தை ஆறாம் பவுல் 

"பிறரன்பு, சமுதாய முன்னேற்றத்தை இயக்கும் கருவி"

சமுதாய முன்னேற்றம், மற்றும், உலக அமைதி அனைத்திற்கும் அடிப்படையாக, ஆன்மாவாக செயலாற்றுவது, பிறரன்பு - திருத்தந்தை புனித 6ம் பவுல்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிறரன்பு மட்டுமே, உண்மையான, நேர்மையான மனித முன்னேற்றத்தைக் கொணர முடியும் என்று, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள் கூறிய கருத்தை உள்ளடக்கிய ஒரு நூல், ஜூன் 4, இச்செவ்வாயன்று உரோம் நகரில் வெளியிடப்பட்டது.

"பிறரன்பு, சமுதாய முன்னேற்றத்தை இயக்கும் கருவி - 6ம் பவுல், மக்களின் முன்னேற்றம் மற்றும் FAO" என்ற தலைப்பில், Patrizia Moretti அவர்கள் தொகுத்துள்ள கட்டுரைகள் அடங்கிய நூல், இச்செவ்வாயன்று, வத்திக்கானில் இயங்கும் இத்தாலியத் தூதரகத்தில் வெளியிடப்பட்டது.

ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனமான FAO உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டு சிறப்பிக்கப்பட்ட 1970ம் ஆண்டு, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், அந்நிறுவனத்திற்கு முதல் முறையாக சென்ற வேளையில், 'பிறரன்பு மட்டுமே சமுதாய முன்னேற்றத்தைக் கொணர முடியும்' என்று கூறியக் கருத்தை மையப்படுத்தி, Moretti அவர்கள் இந்நூலை தொகுத்துள்ளார்.

இந்நூல் வெளியீட்டு விழாவில், FAO நிறுவனம் நடத்தும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் அருள்பணி Fernando Chica Arellano அவர்கள், வத்திக்கானில் பணியாற்றும் இத்தாலியத் தூதர் Pietro Sebastiani அவர்கள், FAOவின் உதவி இயக்குனர், Daniel Gustafson ஆகியோர் கலந்துகொண்டனர்.

சமுதாய முன்னேற்றம் மற்றும் உலக அமைதி அனைத்திற்கும் அடிப்படையாக, ஆன்மாவாக செயலாற்றுவது, பிறரன்பு என்று திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், FAO நிறுவனத்திலும், ஐ.நா. அவையிலும் கூறியதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2017ம் ஆண்டு, உலக உணவு நாளையொட்டி FAO நிறுவனத்தில் வழங்கிய உரையில் எடுத்துரைத்தார் என்று, அருள்பணி Arellano அவர்கள் கூறினார். 

உரோம் நகரில் அமைந்துள்ள FAO நிறுவனத்திற்கு, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், 1970ம் ஆண்டு, முதல் முறையாகச் சென்றதையடுத்து, புனித 2ம் ஜான்பால், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆகியோரும் இந்நிறுவனத்திற்கு சென்று உரை வழங்கியுள்ளனர் என்பதும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிறுவனத்திற்கு இதுவரை மும்முறை சென்று உரை வழங்கியுள்ளார் என்பதும், குறிப்பிடத்தக்கன.

05 June 2019, 15:22