தேடுதல்

Vatican News
புனித திருமுழுக்கு யோவான் புனித திருமுழுக்கு யோவான் 

புனித திருமுழுக்கு யோவான் பிறப்புப் பெருவிழா மறையுரை

தன்னை மையப்படுத்தாமல், இயேசு என்ற மையத்தைச் சுட்டிக்காட்டுபவராகவும், தன் வளர்ச்சியை குறுக்கி, இயேசுவின் வளர்ச்சிக்கு வழிவிடுபவராகவும் வாழ்ந்த திருமுழுக்கு யோவான்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தான் ஒரு இறைவாக்கினர் என்று கூறாவிடினும், இறைவனின் பெயரால் பேசிய புனித திருமுழுக்கு யோவானை, மனிதராய்ப் பிறந்தவர்களுள் மிகப்பெரியவர் என்று இயேசு கூறினார் என திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஜூன் 24ம் தேதி மறையுரை வழங்கினார்.

Order of Malta என்ற அமைப்பினருக்கு பாதுகாவலராக புனித திருமுழுக்கு யோவான் இருப்பதாலும், ஜூன் 24, இத்திங்களன்று, அவரது பிறப்புப் பெருவிழா என்பதாலும், புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்செலோ பெச்சு அவர்கள், இவ்வமைப்பினருக்கு நிறைவேற்றிய திருப்பலியில் இவ்வாறு மறையுரை வழங்கினார்.

இத்தாலியின் அவெந்தீனோ (Aventino) நகரில் உள்ள புனித அன்னை மரியா ஆலயத்தில், இத்திங்கள் காலை 9.30 மணிக்கு திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் பெச்சு அவர்கள், "மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே" (மத். 11:11) என்று இயேசு கூறியதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

புனித யோவானின் எடுத்துக்காட்டு, நம் அனைவருக்கும் பெரும் பாடமாக உள்ளது, ஏனெனில், தன்னை மையப்படுத்தாமல், இயேசு என்ற மையத்தைச் சுட்டிக்காட்டுபவராகவும், வலிமையும், ஓங்கிய குரலும் தான் கொண்டிருந்தாலும், இறைவனுக்கு முன் அமைதி காப்பவராகவும், தன் வளர்ச்சியை குறுக்கி, இயேசுவின் வளர்ச்சிக்கு வழிவிடுபவராகவும் இருந்தார் என்று, கர்தினால் பெச்சு அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

இயேசுவுக்குரிய பாதையை தயார் செய்து, அவரது பணிக்கென தன்னை அர்ப்பணித்த புனித யோவான், நம் ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் தூண்டுகோலாக உள்ளார் என்று கர்தினால் பெச்சு அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

24 June 2019, 16:10