தேடுதல்

Vatican News
யெருசலேம் கோவிலினுள் செபிக்கும் விசுவாசிகள் யெருசலேம் கோவிலினுள் செபிக்கும் விசுவாசிகள்  (AFP or licensors)

அனைத்து மதத்தவரும் எருசலேமின் அமைதிக்காக செபிக்கின்றனர்

1994ம் ஆண்டில் அமலுக்கு வந்த, இஸ்ரேலுக்கும், திருப்பீடத்திற்கும் இடையேயுள்ள தூதரக உறவுகள், மேலும், பல்லாண்டுகள் தளைக்க வேண்டும் - பேராயர் அவுசா

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

புனித பூமியின் இதயமாக அமைந்துள்ள, அமைதியின் நகரமாகிய எருசலேமின் அமைதிக்காக, ஒரே கடவுள் கொள்கையைக் கொண்ட மூன்று மதங்களைச் சார்ந்த விசுவாசிகளும் செபித்து வருகின்றனர் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இஸ்ரேலுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே தூதரக உறவுகள் உருவானதன் 25ம் ஆண்டு நிறைவு, நியு யார்க் நகரின் Fordham பல்கலைக்கழகத்தில் சிறப்பிக்கப்பட்ட நிகழ்வில் ஜூன் 19, இப்புதனன்று உரையாற்றிய, ஐ.நா. தலைமையகத்தில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இவ்வாறு கூறினார்.

இந்தப் பூமியில் அமைதிக்காகச் செபிப்பதற்கு ஓரிடம் இருக்கின்றதென்றால் அது எருசலேம் என்றும், உலகின் அனைத்து விசுவாசிகளும், எருசலேமில் அமைதி நிலவ வேண்டுமென்றே செபிக்கின்றனர் என்றும் கூறினார், பேராயர் அவுசா.

இஸ்ரேலுக்கும், திருப்பீடத்திற்கும் இடையேயுள்ள உறவுகளில், கடந்த 25 ஆண்டுகளில்  ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் சவால்கள் பற்றி உரையாற்றிய பேராயர் அவுசா அவர்கள், இவ்விரு நாடுகளுக்கிடையே நிலவ வேண்டிய தூதரக உறவுகளின் சிறப்புப் பண்புகள் பற்றியும் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு மனிதரின் மாண்பும், அடிப்படை உரிமைகளும் மதிக்கப்படவும், பாதுகாக்கப்படவும், எல்லா விதமான சமய சகிப்பற்றதன்மைக்கெதிராய்ச் செயல்படவும், இவ்விரு நாடுகளும் இணைந்து உழைப்பதற்கு அழைக்கப்படுகின்றன என்றுரைத்த பேராயர் அவுசா அவர்கள், திருப்பீடம் இஸ்ரேலுடன் இணைந்து கடந்த 25 ஆண்டுகளில், யூத விரோதப்போக்கிற்கெதிராய்க் கடுமையாய் உழைத்துள்ளது என்றும் குறிப்பிட்டார். 

திருப்பீடம் 183 நாடுகளுடன் தூதரக உறவுகளைக் கொண்டுள்ளது, அதில் இஸ்ரேல் 163வது நாடாக இணைந்தது, இந்த உறவுகள் மேலும் பல்லாண்டுகள் தளைக்க வேண்டுமென்ற வாழ்த்துக்களுடன், இவ்வுரையை நிறைவு செய்தார், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா.

1993ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி, இஸ்ரேலுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே தூதரக உறவுகள் கையெழுத்திடப்பட்டன. இவை, 1994ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி அமலுக்கு வந்தன.

21 June 2019, 15:28