தேடுதல்

Vatican News
திபெத்தில் வாழும் புத்தமத துறவிகள் பங்கேற்கும் கூட்டம் திபெத்தில் வாழும் புத்தமத துறவிகள் பங்கேற்கும் கூட்டம்  (ANSA)

Vesakh விழாவுக்கு திருப்பீட பல்சமய உரையாடல் அவை செய்தி

குடும்பங்கள், குழுமங்கள் மற்றும் நிறுவனங்களில், பெண்களின் மாண்பைப் பாதுகாப்பதற்கு எல்லா விதத்திலும் அக்கறையுடன் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் - திருப்பீட பல்சமய உரையாடல் அவை

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

பெண்கள் மற்றும் சிறுமிகளின், மாண்பையும் சம உரிமைகளையும் ஊக்குவிப்பதற்கு, உலகளாவிய புத்த மதத்தினரும், கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து உழைக்குமாறு, அழைப்பு விடுத்துள்ளது, திருப்பீட பல்சமய உரையாடல் அவை.

Vesakh விழாவை முன்னிட்டு, “புத்த மதத்தினரும், கிறிஸ்தவர்களும்: பெண்கள் மற்றும் சிறுமிகளின் மாண்பையும், சம உரிமைகளையும் ஊக்குவித்தல்” என்ற தலைப்பில், உலகளாவிய புத்த மதத்தினருக்கு செய்தி வெளியிட்டுள்ள, திருப்பீட பல்சமய உரையாடல் அவை, இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.

‘உலக அமைதிக்காக மனித உடன்பிறந்தநிலை மற்றும் ஒன்றிணைந்து வாழ்தல்’ என்ற தலைப்பில், 2019ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி, அபு தாபியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஸ்லாம் மத குரு Sheikh Ahmed el-Tayeb அவர்களும் கையெழுத்திட்ட அறிக்கையில் உள்தூண்டுதல் பெற்று, இவ்வாண்டு, Vesakh விழாவுக்குச் சிந்தனைகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் அச்செய்தி கூறுகின்றது.

மதங்களின் போதனை

இயேசுவின் போதனைகளும், புத்தரின் போதனைகளும், பெண்களின் மாண்பை ஊக்குவிப்பதாக உள்ளன என்றும், பெண்களும், ஆண்களும், மாண்பில் சமமானவர்கள், என்று போதிக்கின்ற கிறிஸ்தவமும், புத்தமும், பெண்களின் முன்னேற்றத்திற்காக, சிறப்பாகப் பங்காற்றி வருகின்றது என்றும், அச்செய்தி கூறுகின்றது.

இக்காலத்தில், மனித வர்த்தகம், நவீன அடிமைமுறை போன்ற, பெண்களுக்கும், இளம் சிறுமிகளுக்கும் எதிராக இடம்பெறும் அநீதிகளும், வன்முறையும், ஓர் உலகளாவிய பிரச்சனையாக உள்ளது மற்றும், இப்பிரச்சனையால், உலகப் பெண்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றுரைக்கும் அச்செய்தி, இந்த அநீதிகளைக் களைவதற்கு, இளம்பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் கல்வி, சம வேலையில் சம ஊதியம், பாரம்பரியச் சொத்துக்களைப் பெறுவதற்குரிய உரிமை போன்றவை வழங்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கின்றது.

பெண்களின் சம மாண்பையும், உரிமைகளையும் ஊக்குவிப்பது, பல்சமய உரையாடலில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்றும், பெண்களையும், அவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும், சுதந்திரத்தைப் பாதுகாப்பது உடனடித் தேவையாக உள்ளது என்றும் கூறியுள்ள அச்செய்தி, இவ்விவகாரத்தில், தலைமைத்துவப் பணியாற்றும் அனைவருக்கும் சிறப்பான பொறுப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

குடும்பங்கள், குழுமங்கள் மற்றும் நிறுவனங்களில், பெண்களின் மாண்பைப் பாதுகாப்பதற்கு எல்லா விதத்திலும் முயற்சிகள் எடுக்கப்படுமாறு, புத்தமத நண்பர்களைக் கேட்டுக்கொண்டுள்ள, திருப்பீட பல்சமய உரையாடல் அவை, உலகிலும், பணியிடங்களிலும், மனிதருக்கெதிராக இடம்பெறும், அநீதியான அனைத்துப் பாகுபாடுகள் முற்றிலும் அகற்றப்படுவதற்கு உழைக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் செயலர் ஆயர் Miguel Ángel Ayuso Guixot அவர்கள், Vesakh விழா செய்தியில் கையெழுத்திட்டு, வெளியிட்டுள்ளார்.

11 May 2019, 15:32