தேடுதல்

Vatican News
லெஸ்போஸ்  தீவில் புலம்பெயர்ந்தோருடன் கர்தினால் Konrad Krajewski லெஸ்போஸ் தீவில் புலம்பெயர்ந்தோருடன் கர்தினால் Konrad Krajewski 

லெஸ்போஸ் தீவின் புலம்பெயர்ந்தோருடன் ஒருமைப்பாடு

லெஸ்போஸ் தீவில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாம்களை ஐரோப்பிய நாடுகள் மறந்துள்ள நிலையில், இத்தீவில் வாழும் புலம்பெயர்ந்த மக்களுடன் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பல நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தவர்களாக கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் (Lesbos) தீவில் வாழும் சிறார்களுக்கு உதவும் நோக்கத்தில் ஒரு இலட்சம் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் தர்மப் பணிகளை ஒருங்கிணைக்கும் கர்தினால் Konrad Krajewski அவர்கள் வழியாக அனுப்பப்பட்டுள்ள இந்த நிதியுதவி, புலம் பெயர்ந்த சிறார்களுக்கு உள்விளையாட்டரங்கம் ஒன்று அமைக்க செலவழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லெஸ்போஸ் தீவிலுள்ள Mytilene நகரின் சிறார் மையம், 500 முதல் 800 புலம்பெயர்ந்த சிறார்களுடன், அரசு உதவிகளும் ஐரோப்பிய ஐக்கிய அவையின் உதவிகளும் இன்றி, தனி மனிதர்கள், தாராள மனதுடன் வழங்கும் நிதி உதவியுடன் இயங்கிவரும் நிலையில், அம்மையத்தின் தொடர்ந்த பணிகளுக்கு உதவும் நோக்கத்தில், திருத்தந்தையின் பெயரால், ஒரு இலட்சம் டாலர் உதவியை வழங்கினார், கர்தினால் Krajewski.

இலக்சம்பர்க் பேராயரும் ஐரோப்பிய ஆயர் பேரவையின் அதிகாரியுமான பேராயர் Jean-Claude Hollerich, ஏதன்ஸ் பேராயர்  Sevastianos Rossolatos ஆகியோருடன் லெஸ்போஸ் புலம்பெயர்ந்தோர் மையத்திற்கு சென்ற கர்தினால் Krajewski அவர்கள், அச்சிறார்களுடன், திருத்தந்தையின் ஒருமைப்பாட்டையும் தெரிவித்தார்.

கிரேக்க நாட்டின் இத்தீவில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாம்களை ஐரோப்பிய நாடுகள் மறந்துள்ள நிலையில், இத்தீவில் வாழும் புலம்பெயர்ந்த மக்களுடன் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கவும், 2016ம் ஆண்டில் இப்பகுதியில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தில்  புலம்பெயர்ந்தோரைச் சந்தித்ததை திருத்தந்தை இன்னும் மறக்கவில்லை என்பதை அறிவிக்கவும், வளமான இடங்களில் இவர்கள் குடியமர்த்தப்பட பாலமாக செயல்படும் திருத்தந்தையின் விருப்பத்தை தெரிவிக்கவும், இப்பகுதிக்கு திருத்தந்தையால் தான் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் கர்தினால் Krajewski.

09 May 2019, 15:36