தேடுதல்

Vatican News
கர்தினால் ஆஞ்செலோ பெச்சு கர்தினால் ஆஞ்செலோ பெச்சு   (ANSA)

புனிதர் பட்ட வழிமுறை பேராயத்தின் 50ம் ஆண்டு

புனித வழிபாட்டு முறை பேராயமாக இருந்த ஓர் அமைப்பை, 1969ம் ஆண்டு மே 8ம் தேதி, புனிதத் திருத்தந்தை 6ம் பவுல், புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயமாகவும், இறைவழிபாட்டு பேராயமாகவும் பிரித்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வண்ணம், மே 8, இப்புதன் மாலை, புனித பேதுரு பசிலிக்காவில், இப்பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ பெச்சு அவர்கள் திருப்பலியாற்றி, மறையுரை வழங்கினார்.

இத்திருப்பலியில் கலந்துகொள்ள வந்திருந்த கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும், புனிதர்பட்ட வழிமுறை ஆய்வுகளில் உதவி செய்யும் மருத்துவர்கள் மற்றும் ஏனையப் பணியாளர்கள் அனைவருக்கும், கர்தினால் பெச்சு அவர்கள், தன் மறையுரையின் துவக்கத்தில் நன்றி கூறினார்.

புனித வழிபாட்டு முறை பேராயமாக இருந்த ஓர் அமைப்பை, 1969ம் ஆண்டு மே 8ம் தேதி, புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயமாகவும், இறைவழிபாட்டு பேராயமாகவும் பிரித்தார் என்பதை, கர்தினால் பெச்சு அவர்கள் தன் மறையுரையில் நினைவுகூர்ந்தார்.

"திருஅவையின் மிக எழிலான முகம், புனிதம்" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் 'Gaudete et Exultate' என்ற திருத்தூது அறிவுரை மடலில் கூறியுள்ளதை, தன் மறையுரையில் குறிப்பிட்ட கர்தினால் பெச்சு அவர்கள், இந்த அழகிய முகத்தின் வெளிப்பாடுகளாய், நாம் பரிந்துரைக்கும் அருளாளர்களும், புனிதர்களும் விளங்குகின்றனர் என்று எடுத்துரைத்தார்.

அண்மையக் காலங்களில், அருளாளர்கள் மற்றும் புனிதர்கள் மீது திருஅவையின் கவனம் பெருமளவு திரும்பியுள்ளது என்பதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் பெச்சு அவர்கள், அதே வேளையில், திருஅவையில் தவறிழைத்தோர் மீதும், உலகின் கவனம் திரும்பியிருப்பது, நம்மை வேதனைக்குள்ளாக்குகிறது என்று கூறினார்.

50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் இவ்வேளையில், புனிதத்தின் பல்வேறு முகங்களையும், நற்செய்தி அறிவுப்புப் பணியின் புதிய வழிகளையும் உலகறியச் செய்வது நமது கடமை என்று கர்தினால் பெச்சு அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

09 May 2019, 15:25